தூத்துக்குடியில் கடந்த மாதம் 17, 18 தேதிகளில் பெய்த அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உணவு பொட்டலங்கள், நிவாரண உதவி பொருட்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகர், இந்திரா நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டெர்லைட் சார்பில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.




நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் முதன்மை இயக்க அலுவலர் ஏ.சுமதி தலைமை வகித்து 1000 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள், வேட்டி, சேலை, துண்டு, சோப்பு, பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட 26 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண தொகுப்பை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.




பின்னர் ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் சுமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போதிலும் மக்கள் நலப்பணிகளை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் முக்கிய பணியாக இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவி வருவதை கருதுகிறோம். தூத்துக்குடியில் மழை வெள்ளம் ஏற்பட்ட அடுத்த நாளே ஸ்டெர்லைட் நிறுவனம் களத்தில் இருந்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாதவர்களை படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்தோம்.




மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று சுமார் 1 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளோம். 2-ம் கட்டமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட், பால்பவுடர், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் போன்ற நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை 10 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். தற்போது மூன்றாம் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி வருகிறோம். சுமார் ரூ.2000 மதிப்புள்ள 15 ஆயிரம் தொகுப்புகளை ஏற்பாடு செய்து, இதுவரை 11 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இதுவரை ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை செய்துள்ளோம். தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த பேரிடரில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு தங்கள் பழைய நிலைக்கு திரும்ப ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து துணை நிற்கும் என்றார் அவர். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் தகவல் தொடர்பு துறை தலைவர் மீரா ஹரிதாஸ், சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் ஸ்டெர்லைட் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.