தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி தெரிவித்தாா்.


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலகம் முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டு தொடக்க நிகழ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நேரலையில் பார்ப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.




சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் பாா்வையிட்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறும்போது,தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடிக்கும், வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த இரு ஒப்பந்தங்களால், 8 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.




மேலும், தமிழக அரசு ஏற்பாட்டின் படி, அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கும் வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் காப்பீடு பெறுவதற்கும் தமிழக முதல்வர் ஏற்பாடுகள் செய்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.




திருநெல்வேலியில் மழை பெய்தாலே தூத்துக்குடி மாவட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் வழியாகத்தான் வருகிறது. எனவே தென்பகுதியில் உள்ளவர்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பெய்யும் மழை நீரும் உப்பாறு ஒடைக்கு தான் வருகிறது. வீடுகள் மற்றும் படகுகளை இழந்தவர்களுக்கு தனியாக திட்டம் உள்ளது. மீட்பு பணிகளை முடிப்பதற்கே 15 தினங்கள் ஆகிவிட்டது காப்பீடு செய்யப்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் ஒவ்வொரு துறையாக ஆலோசனை செய்து இருக்கிறோம். அவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். அது தொடர்பான வேலைகளை தான் தற்போது செய்து வருகிறோம்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, சிறு, குறு - நடுத்தர நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.