தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை, தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக இடுக்கண் களைவோம் என்ற புதிய இணையதளம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சீரமைப்பு செய்யப்பட வேண்டிய இடங்கள், தேவைகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிய இணையதளத்தின் இலட்சினையை வெளியிட்டு, இணையதளத்தையும் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகள், அரசு கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், மருத்துவமனை உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் சேதடைந்து உள்ளது. இந்த பாதிப்புகளை சீரமைப்பு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் ‘இடுக்கண் களைவோம்” என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு மாநில அரசு மூலம் வீடு கட்டும் திட்டத்தை தந்திருக்கிறார். விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவிக்கரம் நீட்டி உள்ளார். அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவ விரும்பும் நிறுவனங்களுக்காக ‘இடுக்கண் களைவோம்” என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள்பயன்பெறும் வகையில் ‘இடுக்கண் களைவோம்” இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. தொண்டுள்ளம் கொண்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வருவார்கள். இந்த இணையதளம் செயல்பாடு வெற்றிகரமாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார் கூறினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ‘இடுக்கண் களைவோம்” இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளம் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பயன்பெற்று மகிழ்ச்சி அடையும் வகையில் அனைவரும் செயல்படுவோம் என்றார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தூத்துக்குடி, ஏரல் தாலுகாக்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 7 கிரைண்டர்களை வழங்கி உள்ளார். இதனை கனிமொழி எம்.பி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கினார். தொடர்ந்து இடுக்கன் களைவோம் நிவாரணத்துக்காக கனிமொழி எம்.பி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அமைப்பு சார்பில் சுகாதார நிலையங்களை சீரமைப்பதற்காக ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்துக்கான காசோலையை சுகாதார பணிகள் துணை இயக்குனரிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.