தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரை நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாக உள்ளது. இதில் ஏராளமான மீன்பிடி கிராமங்களும் உள்ளது. இதில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் சிறிய நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த பகுதி மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பெரும்பாலும் மக்கள் நேரடியாக ஏலம் எடுத்து வாங்கி சென்று விடுகின்றனர். அதேபோன்று நெத்திலி போன்ற மீன்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம். இந்த பகுதி மீனவர்கள் கடந்த சில மாதங்களாக நெத்திலி மீன்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் வெயிலில் தாக்கமும் அதிகரித்து உள்ளது.
பருவநிலை மாறுபாடு காரணமாகவும் தூத்துக்குடி கடல் பகுதியில் நெத்திலி மீன்கள் அதிகமாக வரத்துவங்கி உள்ளது. இதனால் புதிய துறைமுகம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் வலையில் பிடிபட்டு வருகின்றன. நெத்திலி வரத்து அதிகரித்து இருப்பதால் அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் பிடித்து வரும் மதிப்பு கூட்டி கருவாடாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்காக தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை பகுதியில் பெரிய வலையை விரித்து உள்ளனர் மீனவர்கள் பிடித்து வரும் நெத்திலி மீன்களை காய வைக்கின்றனர். இதனால் கடற்கரை முழுவதும் கருவாடாக காட்சி அளிக்கிறது. தற்போது வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் நெத்திலி மீன்கள் விரைவில் கருவாடாக விற்பனைக்கு தயாராகி வருகின்றன. இந்த கருவாட்டை கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நெத்திலி கருவாடு ரூபாய் 230 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து மீனவர்களுக்கு கூறும்போது, புதிய துறைமுகம் கடற்கரையில் சிறிய நாட்டுப் படகில் சென்று மீன்பிடி தொழிலை செய்து வருகிறோம். கடந்த 9 மாதங்களாக நெத்திலி மீன்கள் வலையில் பிடிபடவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களாக நெத்திலி மீன்கள் அதிகளவில் வலையில் பிடிப்பட்டு வருகின்றன. இதனை மீனாக விற்பனை செய்யும்போது விலை குறைவாக உள்ளது. இதனால் அதிக அளவில் கிடைக்கும்போது மதிப்புக் கூட்டி கருவாடாக மாட்டி விற்பனை செய்து வருகிறோம்.
இந்த கருவாடு சுவையாக இருப்பதால் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் உங்களுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது என்கின்றனர்.
நெத்திலி கருவாடு நன்மைகள்
எண்ணெய் நிறைந்த மீன்களில் ஒன்றான நெத்திலியில் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் உள்ளன. இரத்தத்தில் உள்ள உடலுக்கு கேடான கொழுப்புகளை குறைக்கும் தன்மை நெத்திலிக்கு உண்டு. கண்பார்வை அதிகரிக்க, சரும பிரச்சனை நீங்க, கண்கள் பார்வைத்திறன் மேம்பட, பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற, புற்றுநோயை தடுக்கவும் நெத்திலி உதவுகிறது. அதேபோல, குழந்தைப்பேறு அடைந்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் நெத்திலி உதவி செய்வதாகவும் கூறுகின்றனர்.