32 பரோட்டா சாப்பிடுங்க - பணமெல்லாம் தர வேண்டாம்- பந்தயத்துக்கு ரெடியா- மெஞ்ஞானபுரத்தில் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தர், இசக்கிமுத்து. இவர்கள் சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதையடுத்து சொந்த ஊரான மெஞ்ஞானபுரத்தில் இரவு நேர பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து அடுத்த கட்ட நகர்விற்காக கடந்த 40 தினங்களுக்கு முன்பு அன்னை நைட் கிளப் என்ற இரவு நேரம் உணவகத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த கடையில் ஏதாவது புதிதாக வியாபரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள் 10 ரூபாய்க்கு பரோட்டா விற்பனை செய்துள்ளனர். அதற்காக கடை முன்பு ஒரு பிளக்ஸ் வைத்துள்ளனர். அந்த பிளக்ஸில் நீங்க வேணா பந்தையத்துக்கு வாறீங்களா? என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதை பார்த்த பொதுமக்கள் என்ன பந்தயம் என்று தெரிந்து கொள்வதற்காக கடைக்குள் செல்கின்றனர். கடைக்குள் 32 பரோட்டா சாப்பிட்டால் பணம் செலுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிகர் சூரி பரோட்டா கடையில் பரோட்டா சாப்பிடுவது போல் இந்த கடையிலும் 32 பரோட்டா சாப்பிட்டால், சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டாம். மாறாக கடையின் உரிமையாளர் அந்த 32 பரோட்டாவிற்கான பணத்தை பரோட்டா சாப்பிட்டவருக்கு தருவார். அதை சாப்பிட முடியாதவர்கள் எத்தனை பரோட்டா சாப்பிட்டார்களோ? அந்த பரோட்டவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது இந்த கடையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கடை மெஞ்ஞானபுரம் காவல்நிலையம் எதிரே அமைந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே மெஞ்ஞானபுரத்தில் கரும்புசாறு கடைக்கு பட்டதாரி இளைஞர்கள் தேவை என்று போஸ்டர் வைக்கப்பட்டு அதுவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் கூறுகையில், "நாங்கள் முதலில் பாஸ்ட்புட் உணவுகளை தான் விற்பனை செய்து வந்தோம். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பரோட்டாவை தொடங்கினோம். அதில் ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் பரோட்டா சூரி அண்ணன் காமெடி நினைவுக்கு வந்தது. அதை வைத்து ஏதாவது வித்யாசமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படி உருவானது தான் இந்த 32 புரோட்டா போட்டி.
இந்த போட்டியில் கடை ஆரம்பித்த அன்று மட்டும் ஒரு இளைஞர் புரோட்டா சாப்பிட முயற்சித்தார். ஆனால் அவரால் 27 பரோட்டா தான் சாப்பிட முடிந்தது. இருந்தாலும் முதல் நாள் முதல் வாடிக்கையாளர் என அவரிடம் பணம் பெறவில்லை. மேலும் அவருக்கு நாங்கள் குளிர்பானம் எல்லாம் வாங்கி கொடுத்து உற்சாப்படுத்தி அனுப்பி வைத்தோம். அதன்பின்னர் யாரும் இந்த போட்டிக்கு தற்போது வரை வரவில்லை. எத்தனை பேர் இந்த போட்டிக்கு வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சினிமாவில் கோடு போடுவது போல் இல்லை. மொத்தமாக 32 பரோட்டா தயார் செய்து அவர்கள் முன்னால் வைத்து விடுவோம். அதை சாப்பிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்" என்றார்.