எய்ம்ஸ் பற்றி எப்போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் செங்கலை தூக்கி கொண்டு செல்கிறார். கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவை திறக்க முடியாத அரசுதான் தி.மு.க. அரசு. நான் விவசாயி என்பதால் மனவேதனை அடைகிறேன்-எடப்பாடி பழனிசாமி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வின் தந்தை செல்லையா இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளேன். இன்று (நேற்று) அவரது இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்து வந்தேன்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டது எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டு இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. கடலூரில் 25-வது வட்ட அவைத்தலைவர் நவநீதம் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். தினம் தோறும் கொலை நடக்காத நாளே கிடையாது. இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ஜனவரி 1-ந் தேதி முதல் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்து உள்ளன.
தமிழகம் கொலை மாநிலமாக மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொப்பி வாப்பா பிரியாணி கடை தொடங்கப்பட்டு உள்ளது. அதில் முகமது ஆசிக் என்பவர் 4 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். அன்றாட சம்பவமாக கொலைகள் நடந்து வருகின்றன. இதனை ஊடகத்தின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தெரிவித்து உள்ளேன். ஆனால் விடியா தி.மு.க. அரசு காவல்துறையை ஏவல் துறையாக வைத்து உள்ளது. காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்டம் ஒழுங்கை காக்க தவறிய அரசாக உள்ளது. இனியாவது முதல்-அமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து கசாப்பு கடையில் ஆடுகளை வெட்டுவது போல மனிதர்களை வெட்டுகின்ற நிலை மாற வேண்டும். இது தமிழகத்துக்கு பெரும் ஆபத்தாக உள்ளது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா நடமாட்டம் உள்ளது. கஞ்சா போதையால்தான் பல கொலைகள் நடக்கிறது. கொலையாளிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தும்போது, பெரும்பாலான கொலையாளிகள் கஞ்சா போதையில் ஈடுபட்டு இருப்பது தெரிகிறது. விடியா தி.மு.க. அரசு இரும்பு கரம் கொண்டு கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா வருவதாக செய்திகள் வருகின்றன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமையில்லாத ஒரு அரசாக பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். போதை பொருளால், இளைஞர்கள், மாணவர்கள் சீரழியும் காட்சி தொடருகிறது. போதையால் பல கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இது கண்டிக்கத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்களும் கொலை செய்யப்படுவது சர்வசாதாரணமாக தமிழகத்தில் நடந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். தற்போது பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, அரசியல்வாதிகள், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
தி.மு.க.வினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு மாநிலத்துக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள். இதே தி.மு.க. மத்தியில் 13 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார்கள். பா.ஜனதா, காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க.வினர் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார்கள். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நிதிமந்திரியாக இருந்தார். 13 ஆண்டுகள் தி.மு.க. எம்.பி.க்கள் மத்தியில் மந்திரியாக இருந்தார்கள். அப்போது எவ்வளவு நிதியை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்கள். எவ்வளவு புதிய திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதனால் தமிழகம் எவ்வளவு ஏற்றம் பெற்றது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றையதினம் தமிழகத்தில் தி.மு.க. மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதனை மறைக்க தி.மு.க.வினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். இதுதான் உண்மை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய ஆட்சியில் இருந்த போது நிதியை பெற்று இருக்கலாம். புதிய திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து இருக்கலாம். அதனை அவர்கள் செய்யவில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் மத்தியில் இருக்க வேண்டும். அதுதான் அவரது எண்ணம். மக்களை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. தற்போதுதான் தமிழ்நாட்டை பற்றி இன்றைய முதல்-அமைச்சர் சிந்தித்து உள்ளார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறது. அதோடு உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி வாரியாக, அதில் உள்ள சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களை கேட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. தமிழகம் கொலை மாநிலமாக காட்சி அளிக்கிறது, இந்த திராவிட மாடல் ஆட்சியில். மத்தியில் எந்த அரசு வந்தாலும் நாம் கேட்ட நிதியை கொடுப்பது கிடையாது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.க. ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. அவர்கள் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை மறைப்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க.வினர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதனை அவர்கள் சரி செய்து, மக்களுக்கு நல்லதை செய்தார்களா என்றால், இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை பற்று பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய அற்புதமான திட்டமாக சேலம் மாவட்டம் தலைவாசலில் பிரமாண்ட கால்நடைப்பூங்கா, முழுக்க முழுக்க மாநில நிதி ரூ.1000 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளாக அந்த கால்நடை பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 1050 ஏக்கரில் பிரமாண்ட கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தை திறந்து வைத்து இருந்தால், கால்நடை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பார்கள். அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று இருப்பார்கள். அதனை இந்த அரசு செயல்படுத்த மனம் இல்லை. ஏனென்றால் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், அதனை முடக்கி வைத்து இருக்கிறார்கள்.
ஆனால் எய்ம்ஸ் பற்றி எப்போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் செங்கலை தூக்கி கொண்டு செல்கிறார். கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவை திறக்க முடியாத அரசுதான் தி.மு.க. அரசு. நான் விவசாயி என்பதால் மனவேதனை அடைகிறேன். நான் அமெரிக்காவுக்கு சென்று அப்பல்லோ பால் பண்ணையை பார்வையிட்டேன். அங்கு ஒரு பசு 60 லிட்டர் பால் கொடுக்கிறது. அது போன்ற பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். அது போன்ற பசுக்களை உருவாக்கும் போது, அந்த பசு நம் சீதோஷ்ன நிலைக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். அதே போன்று ஆடு, கோழி, பன்றி, மீன் போன்றவை இந்த ஆராய்ச்சியில் வருகிறது. மக்களுக்கு பத்திரிகைகள் உண்மை நிலையை எடுத்துக் காட்ட வேண்டும். ரூ.1000 கோடியில் கட்டப்பட்ட பூங்கா பாழடைந்து கிடக்கிறது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பெண் அதிகாரியை தி.மு.க. நிர்வாகி நாற்காலியால் அடிக்கிறார். அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. ஊடகம், பத்திரிகையாளர்கள் உண்மை செய்தியை வெளியிடுங்கள். எதற்காக பயப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. நடுநிலையோடு செயல்படுங்கள். நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவியுங்கள்” என்றார்.