ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் தோன்றி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணி ஆறு வற்றாத ஜுவநதி. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் வீதம் தினந்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் கொடுத்து வரும் ஆறு. அதுமட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் விவசாய நிலங்கள் இந்த தாமிரபரணி நதி மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.




ஆனால் இன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஆற்று தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இங்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வழங்கப்படும் சாத்தான்குளம் பகுதி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளிலும் குடிநீர் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு மேல்பகுதியில் உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எப்போதும் போல் தான் உள்ளது. இதற்கிடையில் தான் இந்த பச்சை நிறத்தில் மாறியுள்ளது.




எனவே எந்த இடத்தில் பச்சைநிறத்தில் மாறியுள்ளது? என்ன காரணத்திற்காக மாறியுள்ளது? வேறு ஏதும் ரசாய கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.