தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டியது. உப்பளங்களில் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. நேற்று அதிகாலையில் கனமழையாக மாறியது. மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார். நேற்று காலை 10 மணிக்கு பிறகு லேசான வெயில் அடிக்கத் தொடங்கியது.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6.30 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 42.80 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 56.20, திருச்செந்தூர் 146, காயல்பட்டினம் 154, குலசேகரன்பட்டினம் 55, சாத்தான்குளம் 84, கோவில்பட்டி 31, கழுகுமலை 32, கயத்தாறு 18, கடம்பூர் 17, எட்டயபுரம் 16.80, விளாத்திகுளம் 8, காடல்குடி 7, வைப்பார் 32, சூரங்குடி 17, ஓட்டப்பிடாரம் 54, மணியாச்சி 30, வேடநத்தம் 45, கீழஅரசடி 25 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Continues below advertisement

மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டனர். இதனால் மழைநீர் வேகமாக அகற்றப்பட்டது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மதியத்துக்குள் மழைநீர் வடிந்து விட்டது. மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்துள்ளது.

இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பகல் முழுக்க மழை நீடித்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்) குருந்தன்கோடு 38, பாலமோர் 31.4, நாகர்கோவில் மற்றும் பூதப்பாண்டி தலா 30.2, குளச்சல் - 26, கொட்டாரம் 25.6, ஆரல்வாய்மொழி 24, தக்கலை 23.4, திற்பரப்பு - 21.2, சிற்றாறு-2 - 18.4, புத்தன் அணை மற்றும் சுருளக் கோடு - 17.2, பெருஞ்சாணி 15.8, சிற்றாறு-1, பேச்சிப்பாறை, களியல் மற்றும் கோயில்போர்விளை தலா 14.2, முள்ளங்கினாவிளை மற்றும் குழித்துறை 13.8, மைலாடி 13.2, முக்கடல் அணை 12.3, அடையாமடை 10.4 மி.மீ. மழை பதிவானது. மொத்தம் 505.9 மி.மீ. மழை பதிவானது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.14 அடியாக உயர்ந்தது. 560 கன அடி தண்ணீர் வருகிறது. 361 கன அடி திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.53 அடியாக உள்ளது. 579 கன அடி தண்ணீர் வருகிறது. 285 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. சிற்றாறு-1 அணையில் நீர்மட்டம் 5.41 அடியாக உள்ளது. 140 கன அடி தண்ணீர் வருகிறது. 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. திருச்செந்தூரில் இரவு முழுவதும் இடை விடாது பலத்த இடியுடன் பெய்த கனமழையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் சிவன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடை விடாது தொடர் இடி மின்னலுடன் கூடிய கனமழை நேற்று காலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர் பகுதி மழைநீர் வெள்ளமாக தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.