தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை, அந்த தொகுதியின் நாடாளுமன்ற எம்.பி.,யான கனிமொழி விரைந்து சென்ற மீட்ட சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
கடும் பாதிப்பில் நெல்லை:
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அணைகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதாலும், சில இடங்களில் குளங்கள் உடைப்பெடுத்ததாலும், தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தாலும் நகரப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்தது. இதனைத் தொடர்ந்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இரு மாவட்டங்களிலும் முகாமிட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கர்ப்பிணியை மீட்ட தி.மு.க. எம்.பி:
அதேசமயம் நெல்லையில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தூத்துக்குடியில் இன்னும் திரும்பவில்லை. அங்கு பேருந்து, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 நாட்களாக பாதிக்கப்பட்ட விமான சேவை நேற்று மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ள மீட்பு பணியை கண்காணித்து வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உதவி வேண்டுவோர் தன்னை அழைக்குமாறு வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டிருந்தார். அந்த உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி புஷ்பா நகரில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.
கர்ப்பிணி பெண்மணியை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி, அவரும் அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண்மணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழிக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்தநிலையில், நேற்று (19/12/2023) வெள்ளப் பாதிப்பில் சிக்கிய கர்ப்பிணியை நேரில் சென்று, வழியில் சென்ற பெரிய வாகனத்தை மறித்து, கர்ப்பிணியை மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி சேர்த்தார். அவருக்கு மருத்துவமனையில் இன்று (20/12/2023) இரவு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. தாய், சேய் நலமுடன் உள்ளனர். இந்த செய்தியை கனிமொழி,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.