தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிகனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் திருவைகுண்டம் வட்டம் முறப்பநாடு பகுதியில் மருதூர் மேல்க்கால்வாய் இருந்து பக்கப்பட்டி வழியாக செல்லும் பாசனக் கால்வாயில் அதிக நீர்வரத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.ஏரல் பகுதியில் பாதிக்கப்பட்ட வணிக பெருமக்களை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஏரல் மேம்பாலத்தினை ஆய்வு செய்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறும்போது, ”தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 31 உயிரிழப்புகள் கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் முதல் கடட்டமாக 22 பேருக்கு முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரத்து 143 பேர் வீடுகளை இழந்ததாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக 16 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தோம். ஏரல் பகுதியில் வணிகர்கள், பெரும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனையும் ஆய்வு செய்தோம். தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
மாவட்டத்தில் உயிரிழப்பு, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் இழப்பு உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ.188 கோடி தேவைப்படுகிறது. இதனால் ஆய்வு செய்து ஒவ்வொரு கட்டமாக நிவாரண உதவிகள் வழங்கப்படும். வெள்ளம் பாதித்த அனைத்து பகுதியிலும் மீட்பு பணி நடந்தது. நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதில் பெரும்பாலான நிவாரண முகாம்களில் இருந்தவர்கள் தற்போது வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 3 முகாம்களில் மட்டும் மக்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் வினியோகம் 98 சதவீதம் சீரடைந்து உள்ளது. இன்னும் 3 நாட்களில் முழுமையாக சீரடைந்து விடும். வெள்ளம் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவர்கள் பேரிடர் இல்லை என்றார்கள். நாங்கள் பேரிடர் இருக்கிறது என்றோம். தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம். மத்திய நிதிமந்திரி நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க வருகிறார். அவர்கள் பார்த்து விட்டு நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்து உள்ளார். அவர்கள் தேவையான உதவிகளை கொடுப்போம் என்ற கூறி உள்ளனர். இதனால் மத்திய நிதி அமைச்சர் ஆய்வு செய்து விட்டு தேவையான நிவாரண தொகையை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
மழை வெள்ளம் பாதிக்காத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் 200 வருடத்தில் பெய்யாத அளவுக்கு மழை பெய்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இதைவிட பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். கடந்த ஆட்சி போன்று யாரும் வீட்டில் தூங்கி கொண்டு, தொலைக்காட்சியில்தான் பார்த்தேன் என்று சொல்லாமல், அனைவரும் மழை பெய்யும் போது, வெள்ளம் வரும் போதும் களத்தில் இருந்தோம்” என்றார்.