திருச்செந்தூர் அருகே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடுக்கு, திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தினம்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணியளவில் திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு நோக்கி பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. திருச்செந்தூர் அடுத்த குரும்பூரில் நின்று சென்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் அதற்கடுத்த நிறுத்தமான கச்சனாவிளையில் நின்று செல்ல வேண்டும். ஆனால் ரயில் ஓட்டுநர் அதை கவனிக்காமல் கச்சனாவிளையில் வண்டியை நிறுத்தாமல் அதற்கு அடுத்ததாக உள்ள நெய்விளை என்ற பகுதி வரை ரயில் சென்றது. இதற்கிடையில் கச்சனாவிளையில் இறங்க வேண்டிய பயணி பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை மெதுவாக நிறுத்தி அதன் பின்னர் ரயிலை பின்னோக்கி கொண்டு சென்றார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று கச்சனாவிளையில் ரயில் பயணிகளை இறக்கிவிட்டு ரயில் ஏற நின்ற பயணிகளை ரயிலில் ஏற்றிக்கொண்டு சுமார் 15 நிமிடம் தாமதமாக ரயில் சென்றது.
ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவால் நிற்காமல் சென்று விட்டு பொதுமக்கள் அபாய சங்கிலியை இழுத்த பின்னர் மீண்டும் பின்னோக்கி வந்து பயணிகளை இறக்கி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.