ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடந்த ஸ்ரீ கேஜிஎஸ் பள்ளி உரிமை மீட்பு குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 140 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வரும் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைய தொடங்கியதாக கூறப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து தமிழ் தொண்டாற்றிய குமரகுருபரரின் பெயர் தாங்கிய பள்ளி எக்காரணத்தைக் கொண்டும் மூடப்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு பள்ளி அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியை அரசிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன நிர்வாகத்திடம் பள்ளியை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ கேஜிஎஸ் பள்ளி உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில்,
பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளியை, தருமபுரம் ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்க கூடாது. அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் இதனை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.தொடர்ந்து ஸ்ரீ கேஜிஎஸ் பள்ளி உரிமை மீட்புக் குழுவினர் ஊர்வலமாக சென்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இதில், பசும்பொன் ரத்ததான கழக நிறுவனத் தலைவர் ராஜா, கால்வாய் ஊராட்சித் தலைவர் சேகர், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் பால்துரை, அதிமுக நகர செயலாளர் காசிராஜன், பாஜக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் சேவாதளப் பிரிவு நகரத் தலைவர் சித்திரை, நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.