பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவா?... மாவட்ட ஆட்சியர் பழைய குற்றால அருவி பகுதியில் நெகிழி பயன்பாட்டை தடுக்க வனத்துறை சோதனை சாவடி அமைக்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகள் பிரதான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. பழைய குற்றாலத்தில் கடந்த மே மாதம் 17ம் தேதி மதியம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நெல்லையை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் அஸ்வின்  தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டது.




வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பலியான நிலையில் ஏற்கனவே பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பரிசீலனை தற்போது தீவிரமடைந்தது. தொடர்ந்து தற்போது பழைய குற்றால அருவி படிப்படியாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பழைய குற்றால அருவி பகுதியில் வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்க தற்காலிகமாக அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




அதன்படி, தற்போது பழைய குற்றால பகுதியில் உள்ள காப்பு காட்டில் நெகிழியை முற்றிலுமாக ஒழிக்கும் வண்ணம் வனத்துறை சார்பில் நெகிழி பயன்பாட்டை தடுக்க சோதனை சாவடி அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் விளைநிலங்கள் உள்ளதாக விவசாயிகளும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பழைய குற்றால அருவி வனத் துறை வசம் சென்றால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் வனத்துறைக்கு தற்காலிக சோதனை சாவடி அமைக்க அனுமதி அளித்திருப்பதாக வந்துள்ள தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் சுதந்திரமாக அருவிகளில் நீராடி வரும் நிலையில் வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே அருவிகளுக்கு செல்ல முடியும். மேலும் அருவிகளில் குளிக்க கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதன் மூலம் சுற்றுச்சூழலை பராமரிக்கிறோம் என்ற கெடுபிடியும் வந்து விடும். எனவே, பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என்று சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல், குற்றால அருவிகள் வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்றால் தங்களால் கடைகளை போட முடியாது. தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என வியாபாரிகளும் கவலை தெரிவித்து உள்ளனர்.