37 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி பாலம் வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக, பாலம் பணிகளை ஆய்வு செய்த பின் கன்னியாகுமரியில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார்.
சர்வதேச சுற்றுலா பயணிகள் வரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதியை விட திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதி பாறைகள் நிறைந்து காணப்படுவதால் கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் உயர்வு காரணமாக படகு சேவை பெரும்பாலான நாட்கள் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.
இதனை சரிசெய்யும் விதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் விதமாக 37 கோடி ரூபாய் செலவில் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி கூண்டு பாலம் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகளில் கண்ணாடி பாலத்தை நிலை நிறுத்தும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை முடிவடைந்துள்ள பாலம் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு படகில் சென்று நேரில் இன்று ஆய்வு செய்தார். அங்கு படகுகள் நிறுத்தும் பகுதிகள், தூண்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதி உள்ளிட்டவைகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறும் போது, கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் போதுமான படகு இறங்கு தளம் இல்லாமல் இருந்த காரணத்தால் சுமார் 33 கோடி ரூபாய் செலவில் படகு இறங்குதளம் அமைக்கும் நடந்து வருகிறது. இங்கு படகு இறங்குதளம் அமைப்பதால் மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது எனவும், அனைவரும் எதிர்பார்க்கும் கன்னியாகுமரி கண்ணாடி பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது இதில் நடுவில் 2½ மீட்டர் கண்ணாடி இழையால் பாலம் அமைக்கப்படுகிறது எனவும் பணிகள் டிசம்பரில் முடிவடைந்து ஜனவரி மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது திருவள்ளுர் சிலை பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு, திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. RDSO (ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு) அங்கீகரிக்கப்பட்ட M/S மெட்டல் ஸ்கோப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், பாண்டிசேரி நிறுவனத்தில் ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகிய கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று, Network Arch முழுமையாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது.மேலும் முழுமையாக பொருத்தப்பட்ட எஃகு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள எஃகு அலகுகள், இருபுறமும் அமைந்துள்ள கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தப்படும். எஃகு அலகுகளை பொருத்துவதற்கான அடித்தள பணிகள் முடிந்து, அனைத்து பணிகளும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.