குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் நாளிதழ்கள் மூலம் வெளியிட்டுள்ள விளம்பரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 




தமிழகம் வந்துள்ள இந்திய பிரதமர் மோடி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அப்போது, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். அதேநேரம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.




அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்காதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது. ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.




திமுகவினர் இப்படி விரக்தியின் உச்சத்தில் இருப்பது, அவர்களின் கடந்த கால தவறுகளை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று முயற்சிப்பதையே காட்டுகிறது. சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் உள்ளது , இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏன் இதுவரை கட்டப்படவில்லை என்பதற்கு ஒரே காரணம் திமுகதான். இஸ்ரோவின் 1வது ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, ​​இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழ்நாடுதான் இருந்தது. கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாத அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை, தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு வரவழைத்தார். அவரை சந்திக்க இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர், இறுதியாக மதியழகன் குடித்த நிலையில் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். கூட்டம் முழுவதும் அவர் எந்த முடிவிற்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு அந்த திட்டம் வரவில்லை. மேலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டம் தமிழ்நாட்டிற்கு வராமல் திமுக இப்படித்தான் தடுத்தது. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.




இது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் விசாரித்தபோது, இந்த விளம்பரம் திட்டமிட்டு வெளியிடப்படவில்லை. விளம்பரத்தை டிசைன் செய்த நிறுவனத்தினர் கவனிக்காமல் இந்த ராக்கெட் படத்தை வைத்துவிட்டனர். இதனை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண ஒரு விளம்பரம் குறித்து பிரதமர் பேசியிருப்பதன் மூலம் தமிழகத்தில் அவர்களது தோல்வியை காட்டுகிறது என்கின்றனர்