தூத்துக்குடி மீன் வளர்ப்பு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வள பொறியியல் துறை சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சங்கல்ப் திட்ட நிதி உதவியுடன் விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி படகு எஞ்சின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு என்ற ஒரு வார கால உள்வளாக பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பச்சியின் துவக்க விழா தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழிற்சார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.




நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பயிற்சி துவங்கி வைத்து கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, "தமிழகத்தின் மீனவர்களின் நலனை பாதுகாக்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நடுக்கடலில் படகு எஞ்சினில் பழைய ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அங்கேயே சரி செய்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலில் பாதுகாப்பாக மீன்பிடிப்பது குறித்தும் எந்த வலைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறித்தும் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.




நீண்ட பெரிய படகு வைத்துக் கொள்ளவும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லவும் மீனவர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன நிலைகள் தரங்கள் வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீன்பிடி படகின் கேப்டன், என்ஜின் மெக்கானிக் போன்றவர்கள் இருந்தால் தான் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல முடியும் இந்த நிலைக்கு நமது மீனவர்கள் தரம் உயர்த்தவே இதுபோன்று பயிற்சிகள் அளிக்கப்படுகிறது நமது பகுதியைச் சேர்ந்த படித்த மீனவ இளைஞர்கள் கப்பல்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மும்பை போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெறுகிறார்கள் அவர்களுக்கு இங்கேயே பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்த அவர், "தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்துவதற்கு இட நெருக்கடி இருப்பதால் மீனவர்கள் சிரமப்படுவதாக தெரிவித்தனர். எனவே தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். தூத்துக்குடி மட்டுமின்றி தருவைகுளம், குமரி மாவட்டத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்காக திமுக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் வெளியே தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக தான் ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டோம். விளம்பரத்தை வடிவமைத்தவர்கள் சிலர் தவறுகளை செய்துவிட்டார்கள். அதனை நாங்கள் கவனிக்கவில்லை. மற்றபடி வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு கிடையாது. எங்கள் நெஞ்சில் நிறைந்திருப்பது இந்தியா பற்று தான். சாதி, மத மோதல்களை உருவாக்காமல் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் நாங்கள். அரசு விழாவில் அரசின் திட்டங்களை பற்றி பேசுவார்கள், அதன் பயன்களை பற்றி பேசுவார்கள். ஆனால் அரசு விழாவில் அரசியல் பிரசாரத்தை பிரதமர் பேசியுள்ளார். இதனை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது. அடிப்படையே புரியாமல் நடந்து கொள்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறது. எங்களது எம்பி, அமைச்சரை அவர்கள் புறக்கணித்தாலும் மக்கள் மன்றத்தில் நாங்கள் முழுமையாக நிறைந்திருக்கிறோம். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். இந்தியா முழுமைக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அவர்கள் கூடி யார் பிரதமர் என முடிவு செய்வார்கள். நமது பிரதமர் மத்தியில் அமருவார்” என்றார்.