அண்ணாமலைக்காக கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. அண்ணாமலை எல்லாம்  எங்களுக்கு பொருட்டே அல்ல. தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பாஜக கண்டு கொள்ளவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூகூறியுள்ளார். 




சென்னை -நாகர்கோவில் இடையான  வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கு தொடர்ந்து ரயில்வே துறையிடம் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரயில்வே துறை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே  பாரத் ரயில் நின்று செல்லும் என்று அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பினால் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 3  மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். வந்தே  பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு முயற்சி எடுத்து வெற்றி கண்ட  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சட்டமன்ற அலுவலகத்தில் லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.




இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு கூறுகையில், என்றும் ஜெயலலிதாவை மையப்படுத்தி தான் தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளனர். ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்துகிற நிலைக்கு வந்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அரசியல் லாபத்திற்காக ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர். டிடிவிக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதா பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும்.




தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.  அண்ணாமலைக்காக அல்ல, அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல, தமிழர் நலம் சார்ந்த விரோத போக்கை பாஜக கடைபிடித்ததால் தான் தமிழக தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி உயரவில்லை, 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியை கூட பாஜகவால் தாண்ட முடியவில்லை.


டாக்டர் பட்டம் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது அவர்கள் ஆட்சி காலத்தில் வேண்டுமானால் அவ்வாறு செய்து இருக்கலாம். அவ்வாறு கொச்சைபடுத்துவது  கண்டிக்கத்தக்கது.




சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.கே.சிங் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினேன். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல  நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில்  நேற்று முன்தினம் தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் வாரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி  மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இந்த நேரத்தில் ரயில்வே துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறினார்.