தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்க நிலைக்கு தள்ளப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்.ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை. இருந்த போதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்.மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார் இதற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நாணயம் வெளியீடு விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் வருவது இயற்கையான நிகழ்வுதான் இதில் அரசியல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளச்சாராய சாவு, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திமுகவினரே போதை பொருட்களை கடத்தும் நிலை இருக்கும்போது போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்ததை கேலிக்கூத்தாக தான் மக்கள் பார்ப்பார்கள்” என்றார்.
2026ல் நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜு, நிச்சயமாக, அரசியலில் எந்த நிகழ்வு என்றாலும் வரும், நிச்சயமாக அவர்கள் (சீமான் விஜய்) யாரும் திமுக ஆட்சியை விரும்பவில்லை.நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது இண்டியா கூட்டணி வெற்றி, திமுக வெற்றி கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் பாஜகவிற்கு எதிரான மனநிலையில் இருந்தனர். மத்தியில் பாஜக ஆட்சியி இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது.
2026 தேர்தலை பொருத்தவரை அதிமுக அதிமுக - திமுக வா ? எடப்பாடி பழனிச்சாமியா - மு க ஸ்டாலினா என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். நல்லாட்சி நாயகனாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதிமுக தனித்து நின்றாலும் வெற்றி பெறுவோம்.திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இண்டியா கூட்டணியில் இருந்தனர்.
சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது. திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை அரசு அடக்குமுறை மூலமாக நடவடிக்கை எடுக்கிறது. குறிப்பாக சவுக்கு சங்கர் மேல் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியின் போது ஊர் ஊராக பாடல் பாடிய கோவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசனை ஆதரித்து தான் செய்தி வெளியிட வேண்டும், எதிர்த்து வெளியிடக் கூடாது என்று நிர்பந்தம் செய்யப்படுகிறது மறைந்த தலைவர்கள் பற்றி அமைச்சர் த.மோ. அன்பரசன் தவறாக பேசுவது அழகல்ல. அவர் அவருடைய இன்சியலில் இருப்பது போல தரங்கெட்ட மோசமான அமைச்சர்.அநாகரிமாக உள்ளவர்களை திமுக அமைச்சராய்க்கி உள்ளது. இதை கண்டிக்காமல் இருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தரமும் அப்படித்தான் உள்ளது. திமுக, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நிச்சயமாக அடுத்த கட்ட நடவடிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என்றார் .