தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்று பல்வேறு விதங்களில்  தமிழகத்தில் பல நகரங்களில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்கி வருகிறது. இதன்காரணமாக பல மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , தூத்துக்குடி மாவட்டத்தில் நாலை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை  (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் நடக்கிறது. இதில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.

Continues below advertisement

இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுநிலை பட்டதாரி, பி.இ, டிப்ளமோ, நர்சிங், ஐ.டி.ஐ படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனல் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரியான deo.tut.jobfair@gmail.com-ல் தகவல்களை பெறலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் எனில் Candidate Login-இல் பதிவு செய்யவும், வேலையளிப்பவர்கள் எனில் Employer Login-இல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.