தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவுக்கு சீர்குலைந்து உள்ளது என கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.




கோவில்பட்டி அருகே கடம்பூர் சிதம்பரபுரம் இல்லத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தகப்பனார் செல்லையா கடந்த 25ம் தேதி அன்று காலமானார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்லத்திற்கு நேரில் சென்ற புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அதிமுக முன்னாள் சாத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ராஜவர்மன், கடம்பூர் ராஜூ தந்தையார் செல்லையாயின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.




பின்னர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவுக்கு சீர்குலைந்து, அனைத்து மாவட்டங்களிலும் எதாவது ஒரு இடத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடியது மது, கஞ்சா போன்றவை தான். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் படிப்படியாக மதுக்கடைகள் குறைப்போம் என்றார்கள். ஆனால் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் இப்போது  தனியார் மதுபான பார்களையும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளனர். இவை தான் தமிழ்நாட்டில் அதிகமாக கொலைகள் நடப்பதற்கு காரணமாக உள்ளது. எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இனியாவது விழித்துக் கொண்டு தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப்பட வேண்டும். 




திமுகவின் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு திட்டத்தின் காரணமாக கடந்த 14 ஆண்டுகளில் மிகப்பெரிய சமுதாயங்களான தேவேந்திர குல வேளாளரும், ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். இதைவிட சமூக அநீதி இந்த நூற்றாண்டில் வேறு எதுவும் கிடையாது. இதுகுறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் உண்மைத்தன்மையை அறியாமல் இயந்திரத்தனமாக உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு என அறிக்கை அளிக்கின்றனர். இதுகுறித்து சென்னையில், பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின் கூட்டத்தை கூட்ட உள்ளோம். 


சென்னையில் உள்ள பல ஐ.ஏ.எஸ். அகாடமியில் இப்போது பதவியில் உள்ள அதிகாரிகள் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. எனவே, குரூப் 1, குரூப் 2 போன்ற பதவிகளுக்கு வினாத்தாள்கள் நிச்சயமாக அந்த மையங்களில் இருந்து வெளியாகிறது. அந்த மையங்களில் படிக்கின்றவர்கள் தான் வேலை வாய்ப்புக்கு செல்கின்றனர்.  மேலும் Ted ஆசிரியர் தேர்வில் வினாத்தாள் எடுப்பவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரிகள் தான் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தி வருகின்றனர் அதனால் பெரும் அளவில் முறைகேடு ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ளது இதனை கலைய வேண்டும் தகுதி உள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும் அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன் தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. மற்றும் ஆசிரியர் தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும்” என்றார்.