பொதுமக்கள் செல்போனை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.




தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறும்போது, "பொதுமக்கள் செல்போனை மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். தெரியாத நபர்கள் டெலிகிராம், வாட்ஸ்அப், போஸ்புக், வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டால் பதில் அளிக்கக்கூடாது. பகுதி நேர வேலைவாய்ப்பு, யூடியூப் லைக், ரேட்டிங், டெலிகிராமில் பிரீபெய்டு டாஸ்க் என பனம் கட்ட சொன்னால் கட்ட வேண்டாம். உங்களை ஆசை வார்த்தை கூறி வலையில் விழ வைத்து, பணத்தை மோசடி செய்து விடுவார்கள். அதிக லாபம், வீட்டில் இருந்தே வேலை எனக் கூறி ஆன்லைனில் முதலீடு செய்ய சொன்னால் முதலீடு செய்யாதீர்கள்.




பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறினால் நம்பாதீர்கள். பணம் எதையும் கட்டாதீர்கள். நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். விமான நிலையம், சுங்கத்துறை அதிகாரி என கூறி உங்களை தொடர்பு கொண்டால் பணம் எதுவும் செலுத்தாதீர்கள். மீசோ, அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் இருந்து கார், பணம் பரிசாக விழுந்துள்ளது எனக் கூறி பணம் கட்ட சொன்னால் நம்பாதீர்கள். பணம் எதையும் அனுப்பாதீர்கள். அவர்கள் போலியான நபர்கள். உங்களை ஏமாற்றிவிடுவார்கள். டவர் அமைக்க இடம் தேவை என கூறி அதற்கு முன்பணம் கேட்டால் நம்பாதீர்கள். லோன் செயலிகள் மூலம் லோன் தருவதாக சொல்லி உங்களிடம் தொடர்பு கொண்டு எந்த வகையிலோ பணம் கட்ட சொன்னால், பணம் கட்டாதீர்கள். நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். மேலும், எந்த சூழ்நிலையிலும், யார் கேட்டாலும் ஓடிபி எண்ணை தெரிவிக்காதீர்கள். எந்த வங்கியில் இருந்தும் ஓடிபி கேட்கமாட்டார்கள்.




மேலும், ஆபாச, பாலியல் ரீதியான செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம். தூத்துக்குடியில் பலர் இதுபோன்ற செயலிகளால் ஏமாற்றப்பட்டு புகார் கூட கொடுக்க முடியாமல் தயக்கமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏதோ ஒரு சூழ்நிலையில் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் கவலைபட வேண்டாம். உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீஸாரை 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். மேலும், https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம். உங்களது பணத்தை விரைவாக மீட்டு தருவதற்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.