தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வு பணிகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.




வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் நுண்கற்கருவிகள், சங்கக்கால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை அடங்கும். இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழிகளில், நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.




அகழாய்வில் தொல்பொருட்களான கண்ணாடி, மணிகள், அறிய வகை கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக் காய்கள், பகடைக்காய், தக்களிகள், மணிகள், காதணிகள், சக்கரங்கள், எடைக் கற்கள், முத்திரைகள், திமிலுள்ள காளைகள், சுடுமண் உருவங்கள், சுடுமண்பதக்கங்கள் வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள்,சங்கு மணிகள், செப்புக் காசுகள், இரும்புப் பொருட்கள், தங்க அணிகலன், கற்கோடாரி, செப்புப் பொருட்கள், கண்ணாடி வளையல்கள், கல் பந்துகள், சுடுமண் பந்துகள், அரவைக்கல், மெருகுக்கல், சுடுமண் அச்சுக்கள், சுடுமண் புகைப்பான்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் தந்தத்தினாலான பதக்கங்கள் போன்றவை கிடைத்துள்ளன.




விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.இதையடுத்து தமிழக அரசு பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தது.மக்களவை தேர்தல் காரணமாக மூன்றாம் கட்ட அகழாய்வு பணி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அகழாய்வு பணிகள் துவங்குவதற்கன முன் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதனை சுத்தப்படுத்தி அளவீடு செய்வது,ஏற்கனவே நடைபெற்ற 2-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளை மூடுவது உள்ளிட்ட பணிகள் அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஜூன் முதல் வாரம் அகழாய்வு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை துவங்க வாய்ப்புள்ளதாக  தொல்லியல்துறையினர்  தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு .க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.