காலநிலைக்கு ஏற்ப சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் வரிசையில் சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம் கடற்கரை, கோடை காலத்திற்கு ஏற்ற இடமான ஊட்டி, கொடைக்கானல் எனப் பல உள்ளன. அதற்கு அடுத்ததாக ஆன்மிகத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களை ஒருங்கே பெற்றுள்ள மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. அரசின் நேரடி தலையீடின்றி முதல் பூங்கா வனத்துறை சார்பில் தேசிய அளவில் நடந்தப்பட்ட ஆய்வுப் பட்டியலில் சிறந்த சூழல் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்க சுற்றுலாத் தலமாக தருவைகுளம் கடற்கரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கடற்கரைப் பகுதியை அழகுப்படுத்துவதற்காக பாதாம், சவுக்கு, பிசின், ஊசியிலை மரங்கள் நடப்பட்டு பசுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவடைந்து சூழல் சுற்றுலா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.


தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதியில் வளரும் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் புற்கள், கடல் விலாங்கு, கடற்குதிரை, வண்ண மீன்கள், கடல் விசிறி, கடல் பஞ்சு, கடல் பாசி, நட்சத்திரமீன், கடல் தாமரை, கடல் அட்டை, சங்கு வகைகள் உள்பட பல்வேறு வகை உயிரினங்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் கண்டுகளிக்கும் வகையில் படகின் அடித்தளத்தில் கண்ணாடி இழை பொருத்தப்பட்டு தருவைகுளம் கடற்கரையில் இருந்து காரசல்லி தீவு வரை கடல் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கடலுக்கு அடியில் snorkelling மற்றும் scuba diving மூலமாகவும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்ய 8681020780 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் கடற்கரையில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும்விதமாக தருவைகுளம் கடற்கரை முழுவதும் நெகிழிப் பயன்பாடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. 


இந்தக் கடல் சுற்றுலா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து காசுவாரிதீவு வரை சுமார் 2 மணி நேரம் கடலுக்குள் நடுவே கண்ணாடி இழை படகில் சென்று கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் கண்டு ரசித்தனர். ஆரம்பத்தில் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் உணவகம், மரங்கள், மின் விளக்குகள் என அனைத்தும் இருந்தன. ஆனால் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் கண்ணாடி இழைப்படகின் தாழ்வாரபகுதி சேதமடைய படகு கரைக்கு ஏற்றப்பட்டது. கடலில் அமைக்கப்பட்ட படகுக்கு செல்லும் தளமும் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் உள்ள கட்டிடங்கள், கழிவறைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தருவைகுளம் கடல்பகுதி நெகிழி இல்லாத பகுதியாக உதட்டளவில் அறிவிக்கப்பட்டதோ என நினைக்கும் அளவில் கடற்கரையில் நெகிழிகள் தேங்கி கிடக்கின்றன. கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடைகளும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் பெரிதாக மலைப்பிரதேசங்கள் இல்லாத மாவட்டம் கடற்கரை சார்ந்த பகுதிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக உள்ளது குறிப்பாக மணப்பாடு,குலசேகரன்பட்டினம்,  காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த அரசு முன் வர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.




இது குறித்து கடந்த மே 3 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.. இந்த நிலையில் ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளை தருவைக்குளம் சமூகம் சார்ந்த சுழல் சுற்றுலா தளத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி இன்று (25.6.24) பார்வையிட்டார்.