தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாஸ்தாவிநல்லூர் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வருபரவர் திருக்கல்யாணி. இந்த பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருபவர் ராபின். துணைத்தலைவர் ராபின் பஞ்சாயத்தின் நல பணிகளுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு பணம் எடுப்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சனை ஏற்படுத்தி வந்ததாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து வந்தனர். மேலும் பஞ்சாயத்தின் பணிகளுக்கு ஓடிபி பெற்றால் மட்டுமே பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணம் எடுத்து பணிகள் செய்ய முடியும். ஆனால் ஓடிபி அனுப்பினால் பஞ்சாயத்து துணைத்தலைவர் அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து பணிகளை செய்ய முடியாத நிலையில் இருந்து வந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் மற்ற 7 கவுன்சிலர்கள் இன்று சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் பஞ்சாயத்து தலைவர் திருகல்யாணி மற்றும் 7 கவுன்சிலர்கள் தங்களது பணிகளை திறம்பட செய்ய முடியாததால் தங்களது ராஜினாமா கடிதத்தை சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலையிடம் வழங்கினர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலையிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது, பஞ்சாயத்து துணைத்தலைவர் ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓடிபி வழங்க மறுத்து வருவதாக கூறுகிறார்கள். இதுகுறித்து துணைத்தலைவர் ராபினிடம் தொடர்பு கொண்டு கேட்டால் பஞ்சாயத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் வவுச்சர் எனப்படும் கணக்கு தகவல்களை என்னிடம் முறையாக வழங்க மறுக்கிறார்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து கேட்பதற்காக துணைத்தலைவரை போனில் தொடர்பு கொண்டபோது அவரது போன் இணைப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து திருக்கல்யாணி என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, ஊராட்சி துணைத்தலைவர் ஆரம்பக்காலம் முதலே பிரச்சினை கொடுத்து வருகிறார். அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என அதிகாரிகளும் எங்களை ஆட்டி வைக்கின்றனர். அப்படி நடந்து வந்தோம், ஆனால் இப்போ செக்கில் கையெழுத்திட மறுக்கிறார். பில் பாஸ் செய்வதற்கு ஓடிபி சொல்ல மறுக்கிறார். அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டோம். அவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினோம். அவரின் அனுமதியோடு அடுத்த நபரான ஜான்சன் என்பவரை இரண்டாம் நிலை அலுவலராக தேர்ந்தெடுத்தோம். அதன் பின் நீதிமன்ற சென்ற அவர் நீதிமன்ற உத்தரவோடு தற்போது ராபின்னே தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஓடிபி சொல்ல மறுக்கிறார். கடந்த 3 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காத நிலையில் இருக்கிறோம். அதிகாரிகளும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் என்னால் தொடர்ந்து இந்த பணியில் நீடிக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் எந்த பணியும் நடக்கவில்லை என தமிழக அரசுக்கு என்னால் களங்கல் ஏற்படும் என்பதால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளோம். எனக்கு ஆதரவாக 8 பேர் உள்ளனர். 2 வது வார்டு உறுப்பினரை தவிர மற்ற அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம் என்று தெரிவித்தார். சாத்தான்குளம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவரை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் 7 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.