திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளை யானை முன் செல்ல,  சுந்தர மூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி  வீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. 




ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கயிலாய மலைக்கு வெள்ளை யானையை அனுப்பி 63  நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வந்ததாக வரலாறு உண்டு. இதனை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளை யானை முன்னே செல்ல சுந்தரமூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் உலா வரும் வைபவம்  ஒவ்வொரு ஆண்டும் சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறுவது வழக்கம். 




இதை நினைவு கூறும் வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.


தொடர்ந்து மாலை கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு திருநீறு பூசப்பட்டு யானை வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.




தொடர்ந்து, தங்கச் சப்பரத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் கோயிலில் இருந்து புறப்பட்டது. வெள்ளை யானை முன் செல்ல, சுந்தர மூர்த்தி நாயனாரின் சப்பரம் பின் தொடர்ந்து சென்றது. திருக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், உள்மாட வீதிகள் மற்றும் ரத  வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் திருக்கோயிலை அடைந்தது. தொடர்ந்து உள் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு, சேரமான் பெருமான் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.