தொடரும் வெடிவிபத்து:




விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5 அறைகள் தரைமட்டமாகின.




இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 5 விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டி வின்னர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ரமேஷ் (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50), 4 பெண் 6 ஆண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்த சிவகாசி, வெம்பகோட்டை மற்றும் ஏழாயிரம் பண்ணை தீயணைப்புத்துறையினர். விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் பட்டாசு ஆலை போர் மேன் சுரேஷ் குமார் மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது ஆலங்குளம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.




இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




பட்டாசு ஆலையில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துகள், பறிபோகும் மனித உயிர்கள்- பட்டாசு ஆலைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தொடர்ந்து இதுபோன்ற அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மருந்துகளை மட்டுமே ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.