தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு செல்வதற்காக பக்கிள் துரை என்ற ஆங்கிலேய அதிகாரியால் இந்த ஓடை அமைக்கப்பட்டது. இதனால் அவரது பெயரிலேயே இன்றளவும் இந்த ஓடை அழைக்கப்படுகிறது. காலபோக்கில் பக்கிள் ஓடை சாக்கடை கால்வாயாக மாறியது. தூத்துக்குடியின் கூவம் என்றழைக்கப்படும் பக்கிள் ஓடையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடுத்து அகற்றப்பட்டது. அப்போது பார்வையிட வந்த அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பக்கிள் ஓடை திரேஸ்புரம் கடற்கரை முதல் 6 கி.மீ. தொலைவுக்கு சீரமைக்கப்பட்டது.


                         

 

தொடந்து ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேங்கிய மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆபத்பாந்தவனாக திகழ்கிறது. முன்பு உபரி நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்த ஓடை தற்போது நகரின் மொத்த கழிவுகளை சுமந்து கொண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக கடலில் கலக்கிறது. பக்கிள் ஓடையில் கழிவு நீர் மட்டுமல்ல அனைத்து கழிவுகளும் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் தங்களது மீன்பிடி படகினை நிறுத்தி வைக்கப்பட்டு படகினை கடலுக்குள் கொண்டு செல்ல வேண்டுமானால் இந்த கழிவுகளில் இறங்கி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


                          

 

ஆண்டுதோறும் மழைக்காலத்தின் போது தேங்கும் கழிவுகள் அகற்றப்படுவதும் தொடர்ந்து மீண்டும் கழிவுகள் சேர்வதும் அகற்றப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. இப்பகுதியில் கழிவுகள் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் சூழல் உள்ளதாக கூறும் மீனவர்கள்,  கடலில் கலப்பதற்கு முன் பக்கிள் ஓடை கழிவுகளையாவது முறையாக கண்காணித்து அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                          

 

மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் முக்கிய அங்கமாக விளங்குபவை இங்குள்ள வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு,வாலிமுனை தீவு, அப்பா தீவு,பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய இந்த 21 தீவுகளும் தான். இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள், வேம்பார் குழுவில் 3 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகள் அமைந்துள்ளன.இந்த தீவுகள் கடல் சூழலில் முக்கியமான அங்கமாக இருப்பதோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பெரும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் கடற்கரையை தாக்காத வண்ணம் தடுப்பு அரண்களாக இவைகள் செயல்படுகின்றன. மேலும் இந்த தீவுகளை சுற்றியபகுதிகளில் தான் மீன் வளம் அதிகம் இருக்கும் என்பதால் இந்த தீவுகள் தான்மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளன. கடல் சூழலிலும், கடற்கரை பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுகள் அண்மை காலமாக பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன. நகரின் மொத்த கழிவுகளும் கடலில் கலப்பதும் மீன் வளங்களை மட்டுமல்ல கடலின் வளத்தையும் அழித்து விடும் சூழல் உள்ளது என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்