மீளவிட்டான் - தூத்துக்குடி இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இரட்டை ரயில்பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மதுக்கர் சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான 158.81 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் ரூ.1890.66 கோடி செலவில் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடம்பூர்-தட்டப்பாறை, திருமங்கலம்-துலுக்கப்பட்டி, தட்டப்பாறை-மீளவிட்டான், துலுக்கப்பட்டி-கோவில்பட்டி, கோவில்பட்டி-கடம்பூர், மதுரை-திருமங்கலம் ஆகிய பிரிவுகளாக பிரித்து பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ரயில் பாதையில் அதிவேக ரயில்கள் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையம் வரையிலான 7.67 கிலோமீட்டர் தூர இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து பெங்களூரு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் மதுக்கர் சவுத்ரி புதிய இரட்டை ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தினார். முதலில் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மோட்டார் டிராலி மூலம் தண்டவாள பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா, மின்மயமாக்க பணிகள் தரமாக செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சிக்னலில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக இந்த சோதனை ஓட்டம் தாமதமாக நடந்தது. அதன்படி தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.26 மணிக்கு புறப்பட்ட ரயில் 6.47 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் உடனடியாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு தட்டப்பாறை ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
இந்த ஆய்வின் போது தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.குப்தா, தலைமை என்ஜினீயர் வி.தவமணிபாண்டி, தலைமை என்ஜினீயர் கே.மஸ்தான் ராவ், ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, திட்டமேலாளர்-2 பத்மநாபன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்