நீதிபதியிடம் புகார் அளித்த செயின் பறிப்பு திருடனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே பெருமாள்குளத்தை சேர்ந்த ராஜகுமரன் என்பவரது மனைவி ஜெயந்தி (40). இவர் அப்பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வமுருகன் (32) என்பவர் ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், செல்வமுருகனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்ததையடுத்து, பொதுமக்களே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.




இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வமுருகனின் சொந்த ஊர் விளாத்திகுளம் அருகே வேம்பார் என்பதும், அவர் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும், திருமணமாகி கடந்த 3 ஆண்டாக பெருமாள்குளத்தில் இருந்து சந்தை வியாபாரத்துக்கு சென்று வருவதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வமுருகன் உடல் நலம் தேறியதையடுத்து நேற்று சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.




அப்போது கைது செய்யப்பட்ட செல்வமுருகன் நீதிபதியிடம், ’என்னை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கொடூரமாக அடித்து உதைத்து காயப்படுத்தினர்’ என புகார் கூறியுள்ளார். அதற்கு செயின் பறிப்பில் ஈடுபட்ட செல்வமுருகன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் சாத்தான்குளம் போலீசார் பெருமாள்குளத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருடன் நீதிபதியிடம் தன்னை பொதுமக்கள் தாக்கினார்கள் என்று தெரிவித்ததை அடுத்து தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண