திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் சாதிய ரீதியான பிரச்சனை ஏற்பட்டதால் கோவிலை பூட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெளியேற்றம்.போலீஸ் நடவடிக்கை.

 

ஆடி மாத திருவிழா:

 

திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் அரசவனங்காடு என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்தின் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் சுமார் 75 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோயிலுக்கு அரசவனங்காட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் இணைந்து சித்திரை மாதத்தில் திருவிழா நடத்தி வந்தனர்.

 



 

பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுப்பு:

 

இந்த நிலையில் நிகழாண்டில் ஆடி மாத திருவிழா நடத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மட்டும்  முடிவு செய்து இன்று திருவிழா நடத்தியதாக கூறப்படுகிறது.அதனையொட்டி  இன்று காலை காவடி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.மாலையில் குத்து விளக்கு பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கீழத் தெரு மற்றும் மேலத் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் பங்கேற்க கூடாது என அந்த ஊரில் வசிக்கும் மற்ற தெரு பகுதி மக்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில் திட்டமிட்டபடி திருவிழா தொடங்கி காவடி வீதி உலா நடந்தது. வீதி உலாவின் போது கீழத்தெரு மற்றும் மேலத் தெரு மக்கள் தாங்களும் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டதையறிந்து திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் திருவாரூர் கோட்டாட்சியர் சங்கீதா, மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். திருவிழாவில் அனைவரும் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும் என கோரினர்.

 

பூட்டப்பட்ட கோயில்:

 

அப்போது கோயிலுக்குள் சென்ற 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழத்தெரு பகுதி மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  போலீசார் கோயிலுக்குள் புகுந்து பக்தர்களை வெளியேற்றிவிட்டு கோயிலை பூட்டினர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் தலா  5 பேரை அழைத்துச் சென்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



 

இந்தக் கோயில் ஏற்கனவே இதே போன்று ஒரு பிரச்சனை காரணமாக 36 ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும், 2011ம் ஆண்டு இந்த கோயில் திறக்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் திருவிழாவில் பங்கேற்கலாம் என முடிவு செய்யப்பட்ட நிலையில், சித்திரை மாதத்துக்கு பதிலாக ஆடி மாதம் புதிதாக திருவிழா நடத்தும் வழக்கத்தை கொண்டு வந்ததால் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாகவும்  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண