சனாதன தர்மம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை அதற்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
"சனாதனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்"
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்து கடுமையாக பேசியிருந்தார். "சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்" என உதயநிதி தெரிவித்திருந்தார்.
மலேரியா, டெங்கு நோயுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு பேசிய அமைச்சர் உதயநிதி, "எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான். டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.
உதயநிதிக்கு எதிராக லைன் கட்டும் மத்திய அமைச்சர்கள்:
இந்த நிலையில், உதயநிதியை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக சாடியுள்ளார். "இது ஒரு தேசிய பணியாக மாற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி/I.N.D.I.A கூட்டணியின் வெட்கமற்று சுரண்டும் குடும்ப அரசியலை நமது நாட்டிலிருந்தும் நமது அரசியலில் இருந்தும் ஒழிதுக்கக்கட்ட வேண்டும்.
இது, அனைத்து இந்தியர்களின் பணியாக மாற வேண்டும். குடும்ப அரசியல் செய்யும் இவர்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டு, தங்களை பணக்காரர்களாக ஆக்கி, மக்களை எப்போதும் ஏழைகளாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் வைத்திருக்கின்றனர். குடும்ப அரசியல் செய்யும் இவர்கள், உண்மையிலேயே ஒட்டுண்ணிகள். பல ஆண்டுகளாக மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி நமது தேசத்தையும் மக்களின் செல்வத்தையும் உறிஞ்சி எடுத்துள்ளனர்.
தங்களின் ஊழல் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தை மறைத்து, அவர்கள் "திராவிட நிலத்தைப் பாதுகாக்கிறோம்" போன்ற கதைகளை உருவாக்கி இந்து மத நம்பிக்கையை அவமதக்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கும் ஒரே விஷயம் அவர்களின் சொந்த சொத்தும் அரசியலும்தான். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த 1 சதவகிதத்தை கூட இவர்கள் செய்யவில்லை" என உதயநிதி குறித்து ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.