தொன்மையான ராமர் பூஜித்த பர்வதவர்த்தினி சமேத ராமலிங்க சுவாமி ஆலயத்தில் சிவலிங்க வடிவில் சங்கு வைத்து பூஜிக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.


ராமர் பூஜித்த கோயில்:


திருவாரூர் அருகே உள்ள கீழக்காவாதக்குடி கிராமத்தில் ராமர் பூஜித்ததாக கருதப்படும் ராமலிங்க சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ராமன் சீதையை தேடிச் சென்ற போது இந்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். காலப்போக்கில் இந்த இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. ராமன் வழிபட்ட காரணத்தால் இந்த இறைவன் ராமலிங்க சுவாமி எனவும் இங்கு உள்ள அம்பாள் பர்வதவர்த்தினி எனவும் அழைக்கப்படுகின்றனர். இங்கு ராமன் வழிபாடு நடத்திய போது  இங்கிருந்து கிழக்கே இரண்டு கல் தூரத்தில் உனக்கு நற்செய்தி கிட்டும் என்று அசரீரியாக சிவப்பெருமான் தெரிவிக்க அதன்படி ராமர் கிழக்கே செல்ல அங்கு பட்சியான ஜடாயுவை மரணப்படுக்கையில் பார்த்துள்ளார்.


அதிர்ச்சி அடைந்த ராமனிடம் ஜடாயு சீதைக்காக ராவணனிடம் போரிட்ட விவரங்களை தெரிவித்து விட்டு உயிர் நீத்தது. பின்னர் ஜடாயுவுக்கான இறுதி சடங்குகளை ராமரே செய்து அடக்கம் செய்தார். அந்த இடம் கயாவுக்கு நிகராக கயா கரை என அழைக்கப்பட்டு தற்போது கேக்கரை என அழைக்கப்படுகிறது. ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்த ராமலிங்க சுவாமி ஆலயம் மிகவும் பழமையானது.இது யாரால் எப்போது கட்டப்பட்டது என்கிற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலையில் இருந்த இந்த ஆலயம் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்து காணப்பட்டது.




இரண்டு நந்தி:


தற்போது கடந்த சில வருடங்களாக இந்த ஆலயம் தகர கொட்டைகையில் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.புதிய ஆலயம் கட்டும் பணியும் அருகில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் ராமர் பூஜித்த ராமலிங்க சுவாமி ஆகியவை உள்ளன. மேலும் ஞான சண்டிகேஸ்வரர் ஆஞ்சநேயர் எண் கோண வடிவில் உள்ள ராகு கேது உள்ளிட்ட பல்வேறு பழமையான சாமி சிலைகள் உள்ளன. குறிப்பாக இந்த ஆலயத்தில் கல்லால் செய்யப்பட்ட ராமர் பாதமும் உள்ளது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு. மேலும் இந்த ஆலயம் ஆலயத்தின் கட்டுமான பணிக்காக தோண்டும் போது கிடைத்த சிறிய நந்தியுடன் சேர்த்து மொத்தம் இரண்டு நந்தி இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




சங்காபிஷேகம்:


இந்த நிலையில் இந்த ஆலயத்தில் 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லிங்க வடிவில் சங்குகளை வைத்து கலசத்தில் புனித நீர் வைத்து பூஜை செய்து, அதன் பின்னர் யாகம் வளர்த்து வழிபாடு நடத்தப்பட்டு பூர்ணாகதி நிறைவுற்ற பின் ராமலிங்க சுவாமிக்கு பால் பன்னீர் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கலசத்தில் உள்ள புனித நீரால் ராமலிங்க சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு 108 சங்குகளில் உள்ள புனித நீரால் இறைவன் இறைவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.