மன்னார்குடி அருகே இடி தாக்கி தந்தை, மகன் பலியானர்கள். திருமணமான நான்கு மாதத்தில் கணவன் உயிரிழந்ததால் மனைவி சோகத்தில் மூழ்கியுள்ளார்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கனமழையானது கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு மிக கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூரில் 67 மில்லி மீட்டர் மழை அளவும் நீடாமங்கலத்தில் 50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 99 மில்லி மீட்டர் அளவில் மழை அளவு என்பது பதிவாகியுள்ளது. இந்த திடீர் கனமழை என்பது இடி,மின்னல் மற்றும் காற்றுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் அன்பரசு என்பவர் கனமழை பெய்து வருவதால் தனது வயலில் நீர் நிரம்பி பயிர்கள் மூழ்கி விட கூடும் என்பதால் தனது வயலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு தனது மகன் அருள்முருகனுடன் வயலுக்கு சென்றுள்ளார்.
தந்தை, மகன் இருவரும் வயலுக்குச் சென்று தங்களது வயலில் இருந்து நீரை வடிய வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இடி தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடி முதலில் மகன் அருள் முருகன் மீது விழுந்துள்ளது அப்போது அருகில் இருந்த தந்தை மீதும் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு எதுவும் தெரியாத காரணத்தினால் அவர்கள் காலையில் எழுந்து அருள் முருகனையும் அன்பரசுவையும் தேடி உள்ளனர். வீட்டில் அவர்கள் இல்லாததால் வேறு எங்கும் வெளியில் சென்று இருக்கலாம் என்கிற அடிப்படையில் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர்.
இறுதியாக வயலுக்கு சென்று இருக்கலாம் என்கிற அடிப்படையில் தேடிப் பார்த்தபோது அங்கு இருவரும் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்டு மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் தள்ளிக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கனமழை பெய்து கொண்டிருக்கும் பொழுது மரத்தின் ஓரத்திலோ அல்லது விவசாய நிலத்திலோ பணிகளை மேற்கொள்ளும் பொழுது இடி தாக்கி எளிதில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆகையால் பொதுமக்கள் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது விவசாய பணிகளுக்கு மழை விட்ட பிறகு சென்றால் இதே போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் எனவும் வேளாண் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.