உடலுக்கு உடல்பயிற்சி மிக மிக அவசியம். என்னதான் உணவில் கட்டுப்பாடுகள். சீரான தூக்க பழக்கவழக்கம் இருந்தாலும் கூட உடற்பயிற்சி இல்லாவிட்டால் பல்வேறு வாழ்வியல் நோய்களும் வரிசைக் கட்டிக்கொண்டு வந்து சேரும். அது வயது ஆக ஆக உடற்பயிற்சியின்மை ரத்த சர்க்கரை தொடங்கி நிறைய நோய்களை வரவேற்கும். உடற்பயிற்சி சீராக செய்தால் அது உங்களின் உடல் எடையை சரியாக வைத்து, இதய நாள நோய்களைத் தவிர்த்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.
ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் அது உங்கள் உடலில் குறிப்பாக மூளையில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். ஆகையால் உடற்பயிற்சியை செய்யும்போது உங்கள் உடல் அளவு வயது எடை திறனுக்கு ஏற்ப தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாக ஒரு வளர்ந்த நபர் வாரத்தில் 5 முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அல்லது அதே நபர் 2 அரை மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்யலாம். இதையெல்லாம் மீறி அதீத உடற்பயிற்சி என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.
1. உயிரிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்:
வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் அதி வேகத்தில் ஓடும் நபராக இருந்தால் அவருக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் அதிவேகமாக ஓடுவது மிதமாக ஓடுவதால் கிடைக்கும் நன்மையை தகர்த்துவிடும். மிதவேகம் மிக நன்று.
2. அதிகப்படியான உடல் உழைப்பைக் கோரும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்கலாம்
சில உடற்பயிற்சிகள் மிக அதிகப்படியான உடல் உழைப்பைக் கோரும். நம் உடலின் சக்தியை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் வகையில் செயல்படும். அத்தகைய உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இதய பாதிப்பு, இதயத் துடிப்பில் சீரற்ற தன்மை, நாளங்கள் பெரிதாகுதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இத்தகைய கடினமான உடற்பயிற்சிகள் இதயத்தின் தன்மையையே மாற்றக் கூடும். இதயத் தசைகளை தடிமனாக்கி அதன் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அண்மையில் உடற்பயிற்சியின் போது உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு கூட கடின உடற்பயிற்சியால் இருக்கக் கூடும் என்று கூறினார்.
3. மகளிருக்கு ஏற்படும் பாதிப்பு:
பெண்கள் அதிகப்படியான உடற்பயிற்சி செய்யும்போது அத்லீட் ட்ரியாட் போன்ற பாதிப்புக்கு உள்ளாகலாம். அதாவது மாதவிடாய் சுழற்சியை இழத்தல், ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு தாதுக்கள் இழப்பு, சாப்பிடுவதில் சிக்கல் ஆகியனவற்றை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
4. டெஸ்டோஸ்டீரோன் அளவைக் குறைக்கலாம்
ஆண்கள் அதிகப்படியான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது அவர்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் அளவு குறைகிறது.
5. காயங்கள் ஏற்படலாம்:
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இல்லை மாற்று பாலினத்தவராக இருந்தாலும் சரி அதிகப்படியான உடற்பயிற்சிகளால் ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர்ஸ், டெண்டானிட்டிஸ் போன்ற திசுக்காயங்களைப் பெறக்கூடும்.
6. உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தும்
அதிகப்படியான உடற்பயிற்சி செய்வதால் இதயத்தில் பாதிப்பு, லிகமென்ட் டேர் எனப்படும் தசைநார் சிதைவு, உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊறு ஆகியனவற்றை ஏற்படுத்தும்.
7. உங்கள் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
உங்கள் உடற்பயிற்சியை ஒருநாள் செய்யத் தவறிவிட்டாலும் கூட உங்களுக்கு பதற்றம் ஏற்படும். அதாவது ஒரு குடிநோயாளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் மதுவை உட்கொள்ளாவிட்டால் அவனுக்கு எப்படி பதற்றம் ஏற்படுகிறதோ அதேபோல் உடற்பயிற்சியை செய்ய முடியாத போது பதற்றம் உண்டாகும். இது மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டால் நீங்கள் ஒர்க்கஹாலிக் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதனால் சரியான அளவில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆகையால் என்னால் ஒருநாள் கூட ஒர்க் அவுட் பண்ணாமல் இருக்க இயலாது என்பதை பெருமையாக சொல்லாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு செக் வையுங்கள். அதனால் தான் நம் மூதாதையர் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமாகவே இருந்தாலும் கூட அது நஞ்சாகிவிடும் என்று எளிமையாக வலியுறுத்தியுள்ளனர்.