உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த பொருளைக் கேட்டு அடகு கடையை உடைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் மெயின் ரோட்டில் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த் வயது 21 என்பவர் நேற்று கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று கொலுசை மீட்க அடகு கடைக்கு வந்த இளைஞர் அரவிந்த் அடகு கடை உரிமையாளரிடம் மூன்றாயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் மகேந்திரா ராம் நீங்கள் கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளீர்கள். ஆனால் 3000 ரூபாய் மட்டுமே கொடுக்கிறீர்கள் ஆகையால் முழு பணத்தை கொடுத்தால் கொழுசை தருகிறேன் என கூறினார்.
என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன கடை உரிமையாளர் மகேந்திரராம் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர் பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பணத்தை குறைவாக கொடுத்து நகை கேட்டு கொடுக்காத காரணத்தினால் கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டி கடையை உடைத்து சேதப்படுத்தியதாக கூறி இளைஞர் அரவிந்தனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த அடகு கடையில் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதில் உள்ள காட்சிகளை சோதனை செய்ய சென்றனர். அப்பொழுது கேமரா பழுதாகி பல நாட்கள் ஆகிறது என காவல்துறையினரிடம் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து காவல்துறையினர் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா எப்பொழுதும் செயல்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் தாங்கள் அலட்சிய போக்கில் இருப்பது கண்டிக்கத்தக்கது உடனடியாக சிசிடிவி கேமராவை சரி செய்து வைக்க வேண்டும் என கடையின் உரிமையாளருக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வணிகர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவம் என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதே போன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அரவிந்தனை கைது செய்துள்ளனர். அச்சுதமங்கலத்தில் உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த நகையை கேட்டு அடகு கடையில் தகராறில் ஈடுபட்டு கடையில் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்