அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம்: போக்குவரத்து துறை பொறியாளர் உள்ளிட்ட இருவர் சஸ்பெண்ட்.
திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பேருந்தான A37 திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வைப்பூர் சோழங்கநல்லூர் நரிமணம் வழியாக நாகூர் வரை செல்லும் அரசு பேருந்து ஆகும். இந்த பேருந்தில் மாலை நேரத்தில் பெரும்பாலான பள்ளி மாணவி மாணவிகள் படிக்கட்டுகளில் பயணித்தபடி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் இந்தப் பேருந்து நாகூரில் இருந்து திருவாரூர் வந்து கொண்டிருந்தபோது கங்களாஞ்சேரி ரயில்வே கேட் வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கும் போது வேகத்தடையில் உரசியதில் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு முழுவதுமாக உடைந்துள்ளது. இந்தப் பேருந்து காலை நேரத்தில் நாகூரிலிருந்து திருவாரூர் வந்து கொண்டிருந்ததால் இதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அரசு வேலைக்கு செல்வோர் என பலரும் பயணித்தனர். படிக்கட்டுகளில் அந்த நேரத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேருந்தில் பயணித்த ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி யதையடுத்து திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழகபொறியாளர் அசோகன் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் வீரபாண்டியன் ஆகியோரை நாகை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் மகேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக அரசு பேருந்துகளில் பராமரிப்பு என்பது குறைவாக இருப்பதால் பல்வேறு சம்பவங்கள் இதுபோன்று நடக்கின்றன. பல பேருந்துகளில் மழைக்காலங்களில் மழைநீர் பேருந்துக்குள் வருவது, சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே பழுதாகி நடுவழியில் நின்று விடுவது அதனை பயணிகளை இறங்கி தள்ளி செயல்பட வைப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திருவாரூரில் இருந்து நாகூர் செல்லக்கூடிய இந்த பேருந்து என்பது மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் இருந்து திருவாரூர் வந்து படிக்கும் பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் செல்லக்கூடிய பேருந்தாக உள்ளது.
இந்த விபத்து மாலை நேரத்தில் நடந்திருந்தால் மாணவர்கள் காயமடைந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருவாரூரில் இருந்து கொரடாச்சேரி சென்ற அரசு பேருந்தில் எண்கண் பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து பேருந்துக்குள் உடைத்து சென்று உள்ளே வந்த பொழுது பேருந்தில் பயணம் செய்த அந்த இளைஞர் பலத்த காயமடைந்து கால் முறிவு ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
அரசு பேருந்து முறையான வகையில் பராமரிக்கப்படாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகளை உரிய முறையில் கவனித்து அவ்வப்போது பழுது நீக்கி இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.