ராதிகா ஆப்தே ஊடகங்களுடன் அதிகம் உரையாடாதவர். மேலும் மற்ற நடிகர்கள் போல இவர் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருப்பதில்லை. அதிகம் போட்டோ எடுத்துக் கொள்வதும் இல்லை. அது கிடக்கட்டும் சரி தனிப்பட்ட முக்கியமான தருணங்களையாவது புகைப்படம் எடுத்துள்ளாரா என்று யோசித்தால் அதுவும் இல்லை. இன்னும் கொஞ்சம் ஒருபடி மேலே போய் தனது திருமணத்தில் கூட ஒரு போட்டோவையும் க்ளிக் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தே 2012ம் ஆண்டில் பிரிட்டிஷ் வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான பெனடிக்ட் டெய்லரை மணந்தார். லண்டனுக்கும் மும்பைக்கும் என பயணம் செய்து வாழ்ந்து வரும் இந்த இருவரும் 2011ல் சந்தித்தனர். இருவருமே பொழுதுபோக்கு துறையில் பணிபுரிந்தாலும் தங்களைப் பற்றி அதிகம் பொதுவெளியில் இருவரும் பகிர்ந்துகொள்வதில்லை. 2011ம் ஆண்டு ராதிகா நவீன வகை நடனம் கற்றுக்கொள்வதற்காக ஓய்வுக்காக லண்டனில் இருந்தபோது இருவரும் சந்தித்தனர். விரைவில் ஒன்றாக வாழத் தொடங்கினர். 2013ல் அதிகாரப்பூர்வ திருமணத்துக்கு முன்பு அவர்கள் 2012ல் நண்பர்கள் சூழ ஒரு சிறிய திருமணத்தை லண்டனில் செய்துகொண்டனர்.
திருமணத்தின் 10 ஆண்டுகளை அடுத்து ராதிகா தனது திருமணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதில், “10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெனடிக்ட்டை திருமணம் செய்தபோது, நாங்கள் படங்களை கிளிக் செய்ய மறந்து விட்டோம். நாங்கள் மிகச் சிறிய அளவில் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் எங்கள் நண்பர்களை அழைத்து, நாங்களே உணவு தயாரித்து, வடக்கு இங்கிலாந்தில் ஒரு இடத்தில் திருமணத்தை நடத்தி, பார்ட்டி செய்தோம். ஆனால் திருமணத்தில் படங்கள் இல்லை, எங்கள் நண்பர்களில் பாதி பேர் புகைப்படக் கலைஞர்கள் என்றாலும், அவர்களில் யாரும் எந்தப் படத்தையும் கிளிக் செய்யவில்லை. நாங்கள் அனைவரும் மிகவும் குடிபோதையில் இருந்தோம். அதனால் என் திருமணத்தின் படங்கள் எதுவும் என்னிடம் இல்லை. இதுவும் ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது" என்றார்.
மறக்கமுடியாத சந்தர்ப்பங்களில் படங்களைக் கிளிக் செய்வதில் பெனடிக்ட் தன்னை விட 'மோசமானவர்' என்று ராதிகா மேலும் கூறினார், ஆனால் இப்போது இருவரும் தனிப்பட்ட வாழ்வில் மெதுவாக சில மாற்றங்களை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். “என் கணவர் க்ளிக் செய்வதில் என்னைவிட மோசமானவர், அவர் எந்தப் படங்களையும் கிளிக் செய்வதில்லை. ஆனால், இப்போது நாங்கள் விடுமுறைக்கு செல்லும்போது குறைந்தபட்சம் எதையாவது கிளிக் செய்ய முயற்சிக்கிறோம், ”என்று அவர் கூறினார்.