தருமபுரம் ஆதீனம் மடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழமையான ஆதீன மடங்களில் ஒன்றாக எங்கள் மடம் உள்ளது. சைவ சித்தாந்த மரபை சார்ந்துள்ளோம். அரசிடம் இருந்து எந்தவித உதவியோ, நிதியோ பெறுவதில்லை. மடத்தின் சொந்த நிதியை மட்டுமே கொண்டு இயங்குகிறது.

 

ஆதீன மடம் மற்றும் ஆதீன கர்த்தர் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தான் வரும். ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல. ஆதீனம் பொது நிறுவனம் அல்ல என்பதால் ஆதீன மடங்கள் ஆர்டிஐயின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆதீன மட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்

கீழ் வராது என்று கூறி உத்தரவிட்டார்.

 



மற்றொரு வழக்கு


தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பின் தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. 

 

ஆகவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர், "அரசு பள்ளி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.