காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பது அரசின் பயிர் காப்பீடு திட்டம். இந்த நிலையில் ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப் பட்டதில் பல்வேறு கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில மழை வெள்ள பேரிடரால் அழிந்த நெற்பயிர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு காப்பீட்டு தொகை கிடைக்காத கிராங்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், தொடர் மழையால் அழிந்த சம்பா, தாளடி மற்றும் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் அழிந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மழை பாதிப்பால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தற்பொழுது பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் விவசாயிகளுக்கு 6000 மதிப்பிலான இடுபொருள்கள் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது. ஆகையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டூர் காவல் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாங்கினர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.