பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி வேண்டும் - மத்திய குழுவினரிடம் திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை

’’இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக சுமார் 1.25 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில் கனமழையால் இதில் 80 சதவீதம் வரை பாதிப்பு’’

Continues below advertisement
வடகிழக்கு பருவமழை தொடங்கிய காலம் முதல் திருவாரூர் மாவட்டம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் குறுவை, சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழிந்தன. தமிழக அரசு மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின்படி மத்திய அரசின் குழு புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்தது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவனூர் பகுதியில் மத்திய அரசின் உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பாதிப்புகளை மத்திய குழுவினருக்கு எடுத்துரைத்தார். அதன்பின்னர் விவசாயிகள் மத்திய குழுவினரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
 
அதனைத் தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் சத்யநாராயணன் மத்திய குழுவினரிடம் பயிர் பாதிப்புகள் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி கூறினார். கன மழையால் பயிர்கள் நன்கு வளர்ந்து இருந்தாலும் தூர் கட்டுவதில் பாதிப்பு ஏற்பட்டு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்றும், தேசிய இடர்பாடு நிவாரண தொகை என்பதில் நாம் உற்பத்தி செய்வதற்கான தொகையை வழங்குவதில்லை. தற்போது உர விலை ஏற்றம் போன்ற பல்வேறு இடர்பாடுகளில் விவசாயிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே தேசிய இடர்பாடு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று மாதத்தில் வழக்கத்தைவிட 50 சதம் மழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்திருந்த குறுவை அறுவடைக்குப் பிறகு தெளிப்பு நடவு இயந்திர நடவு மூலம் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகி விட்டன. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி செய்து இருந்தார்கள். இதில் 80 சதவிகிதம் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன. அதேபோல் மீதமிருந்த 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மழை நீரில் மூழ்கி இருந்த காரணத்தால் சுமார் 40,000 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களை உரமிட்டு பயிர்களை மீட்டெடுக்க உரம் இடுவதற்கு டிஏபி யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை, எனவே காலத்தில் உரம் இடாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

 
தொடர் மழையால் விவசாயிகள் வளர்த்து வந்த ஆடு மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன அதேபோல் கோழி வகைகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரிட் வீடுகள் ஏற்கனவே சேதமடைந்த நிலையில் மீண்டும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குடிசை வீடுகளும் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குடிசை வீடுகளும் சேதமடைந்தது உள்ளது. அனைத்து பகுதிகளையும் முழுமையாக பார்வையிட்டால் மட்டுமே முழு சேதத்தை அளவிட முடியும் எனவே சேதமடைந்த நெற்பயிர்களுக்கும் வாழை உளுந்து பயிறு மணிலா வெங்காயம் என பயிர் செய்த விவசாயிகள் தமிழகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே ஒட்டு மொத்தத்தில் அண்மையில் பெய்த மழையால் விவசாயிகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதியை தமிழகத்திற்கு வழங்கி உதவினால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும் எனவே வருகை தந்துள்ள ஆய்வுக்குழு எங்கள் துன்ப துயரங்களை முறையாக மத்திய அரசுக்கு எடுத்துரைத்து தமிழகத்திற்கு டெல்டா மாவட்டங்களுக்கு அதேபோல் திருவாரூர் மாவட்டத்திற்கு நிதிஉதவி கிடைத்திட ஆவணம் செய்திட வேண்டுமாய் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.
Continues below advertisement
Sponsored Links by Taboola