ஜெய்பீம் பல தாக்கங்களை ஏற்படுத்திய அதேவேளையில் ரூ.1கோடியை முதலமைச்சரிடம் வழங்கினார் சூர்யா. இருளர் இன மக்களின் கல்விச் செலவுக்கு என சூர்யா கொடுத்த நிதியைக் கூட படத்தின் ப்ரொமோஷன் என்று பதிவிட்டனர் பலர். ஆனால் சூர்யாவின் உதவி குறித்தும், அவரின் அகரம் அறக்கட்டளை குறித்தும் சொல்ல வேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. அதில் இன்றுதான் டாக்டர். கிருஷ்ணவேணியின் கதை.  கல்விக்கு ஏங்கி நின்றவரை கைகொடுத்து தூக்கிவிட்ட ஒரு உண்மைக்கதை.


ஜெய்பீம் படத்தில் ''பட்டா கூட இல்ல. நாங்க 'பட்டா'னு படிக்கணுமா?''னு ராஜகண்ணன் கேட்க. ''முதலில் படிங்க பிறகு எல்லாம் வரும்''னு நாயகி சொல்வாங்க. எந்த ஒரு நிலையையும் மாற்றும் சக்தி கல்விக்கு உண்டு. அதனை உணர்ந்து வேணியின் வாழ்க்கையில் உண்மையாக்கியது அகரம்.




7ம் வகுப்பு படிக்கும்  போதே தாயையும் தந்தையும் பறிகொடுத்து செய்வதறியாது நின்றார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி. பள்ளிப்படிப்பையாவது முடிக்க முடியுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியுடன் தொடர்ந்தது கிருஷ்ணவேணியின் வாழ்க்கை. உதவிக்கு சிலர் கைநீட்ட கரத்தைப் பற்றுக்கொண்டு 10ம் வகுப்பை தேர்ச்சி அடைந்தார் அவர். தேர்ச்சி என்றால் அரைகுறையாக அல்ல, கணிதம் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசர வைத்தார். இவருக்கு கல்வி கரைபுரண்டோடுகிறது என உணர்ந்த ஆசிரியர் ஒருவர் அவரை 12ம் வகுப்பு வரை கரைசேர்த்துவிட்டார். 12ம் வகுப்பிலும் தன் கல்வித்திறமையை ஊருக்கு உறக்கச் சொன்னார் வேணி. 2011ம் ஆண்டு வந்த +2 ரிசல்டில்  மருத்துவத்துக்கு 196.75 கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தார். ஆனால் நூலிழையில் அரசு கல்லூரி கைமீறி போனது. 7ம் வகுப்பில் தொடங்கிய போராட்டம் பல உதவிகளால் அடுத்தடுத்தக் கட்டத்துக்கு சென்ற நிலையில் நூழிழையில் எல்லாம் இழந்ததை போல நின்றார். 




அப்போது அவருக்கு கிடைத்த ஒரு சிறிய தகவல்தான் அவர் வாழ்க்கையையே மாற்றியது. அது அகரம் அறக்கட்டளையின் தகவல். சூர்யாவின் அறக்கட்டளை கல்விக்கு உதவும் என நண்பர்கள் கூற சென்னைக்கு பஸ் பிடித்தார் வேணி. அப்போது அவரிடம் இருந்தது என்னவோ, நடக்குமா என்ற எதிர்பார்ப்பும், கண் முன்னே கனவுகளும் தான். கைகொடுங்கள் பற்றிக்கொள்வேன் என ஓடி நின்ற வேணிக்கு கைகொடுத்து தூக்கிவிட்டது அகரம். திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் கிருஷ்ணவேணி. தமிழ் வழியில்படித்தவருக்கு மருத்துவம் ஒரு சவாலை உண்டாக்கியது. தான் கடந்த வந்த சவாலைவிடவும் மொழியெல்லாம் ஒரு சவாலல்ல என தூசியாய் ஊதித் தள்ளிய கிருஷ்ணவேணி முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். 




பெற்றோரும் இறந்துவிட நாளை பள்ளிக்கு செல்ல முடியுமா என்ற கேள்விக்குறியோடு பள்ளிச்சிறுமியாக நின்ற வேணி, வெள்ளை உடை அணிந்து மருத்துவராகி ராணுவத்திலும் சேர்ந்தார். மேஜர் அந்தஸ்தில் ராணுவத்தில் மருத்துவராக தற்போது பணியாற்றும் வேணியை, வாழ்க்கையில் ஏற்றிவிட்ட ஏணிப்படிகள் ஏராளம்.  குறிப்பாக மருத்துவக் கனவோடு தடுமாறி நின்ற ஏணியை மேஜராக்கியது சூர்யாவின் அகரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எந்த நிலை சென்றாலும் வந்த நிலை மறக்காதே என்பதை கெட்டியாய் பிடித்துக்கொண்ட வேணி இன்றும் மலைக்கிராமங்கள், ஏழை மக்களுக்கு தன்னுடைய மருத்துவ சேவையை தேடி தேடி செய்துகொண்டிருக்கிறார்.