திருவாரூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

 

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீதம் நேரடி விதைப்பில்,  40 சதவிகிதம் நடவு பணியிலும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு மட்டும் திருவாரூர் - 2.2 சென்டிமீட்டர்.

நன்னிலம் - 9.7 சென்டிமீட்டர் குடவாசல் - 6.4 சென்டிமீட்டர் நீடாமங்கலம் - 4.6 சென்டிமீட்டர் வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.



இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் 30,000 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் முழு கொள்ளளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்பொழுது ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் எங்கள் மாவட்டங்களை ஆய்வு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டால் 6 ஆயிரம் மதிப்பில் இடு பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்களுக்கு இனி இடுபொருள்கள் கொடுத்து எந்தப் பயனும் இல்லை. காரணம் இன்னும் 60 நாட்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் இனி புதிதாக விதை விதைக்கவும் தெளிக்கவும் முடியாது. ஆகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து எங்களுக்கு உரிய நிவாரணத்தை வங்கி கணக்கு மூலமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக வேளாண்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தரவேண்டும் மேலும் மழை பாதிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.