வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். பல கட்ட பிரச்னைகளுக்கு வெளியான மாநாடு படம் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் சிம்புவை தாண்டி எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையும் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். அவரது காமெடிக் கலந்த வில்லத்தனமான நடிப்பு தியேட்டர்களில் மிகப் பெரிய அப்லாஸை அள்ளி வருகிறது.
இவரது நடிப்பை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் அழைத்து பாராட்டினார். சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட எஸ்.ஜே.சூர்யா அஜித் நடிப்பில் வெளியான ‘வாலி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன பின்னர் குஷி படத்தை இயக்கிய அவர் தொடந்து நியூ, வியாபாரி, இசை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ‘இறைவி’ இவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கித்தந்தது. தொடர்ந்து ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் வில்லனாக களம் இறங்கிய எஸ்.ஜே. சூர்யா அங்கும் தனது முத்திரையை பதிவு செய்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யாவை முன்னணி நடிகர்களின் பட்டியலில் சேர்த்தது. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் இறவாக்காலம் ரீலிஸூக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘பொம்மை’ சிவகார்த்திகேயனின் ‘டான்’ ‘கடமையை செய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவைத் தவிர வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவரது இந்த கலவையான கதாபாத்திரத் தேர்வு, நமக்கு விஜய் சேதுபதியை நினைவுப்படுத்துகிறது. ஆம், முன்னணி நடிகர்கள் பட்டியலில் விஜய் சேதுபதி இருந்தாலும், அதற்கான எந்த வரையரைக்குள்ளும் சிக்காமல், வில்லன், கெஸ்ட் ரோல், டிவி நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் தன்னை வெளிப்படுத்துவார் விஜய் சேதுபதி.. எஸ்.ஜே. சூர்யாவின் பாணியும் கொஞ்சம் அதே போல இருப்பதாகவே தோன்றுகிறது.. அவரது அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களும் அப்படியானதாகவே இருக்கிறது.. ஹிரோ என்றில்லாமல் கதையின் நாயகனாக இருப்பதே இனி வரும் காலத்தில் சினிமாவில் தாக்குப்பிடிக்க உதவும் என்பதை இருவருக்கும் தெரிந்து விட்டது போல..