இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி@20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன் கனகசபாபதி மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இந்தி மொழி தமிழகத்தில் அவசியமா என்ற கேள்விக்கு, தமிழ் மொழி தாயைப் போன்றது அதனை என்றும் நாம் மறக்க முடியாது தாய் மொழி இல்லை என்றால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அதே நேரத்தில் இந்தியாவில் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என்பது என்னுடைய கருத்து என்றார். மேலும் கூறுகையில், நாளை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 534 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். நம்முடைய கிராமத்து மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் தேர்வு எழுதுவதற்கு நாம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். 10 தினங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 30 முதல் 40% வரை வெளிமாநில மாணவர்கள் பயின்று வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தேவையான நுழைவுத் தேர்வு குறித்த பாடம் எடுக்கப்படுகிறது. ஆனால் அது நம்மிடம் இல்லை. அதே நேரத்தில் இந்த வருடம் மத்திய பல்கலைக்கழகத்தில் அதனை தொடங்கியுள்ளோம். தமிழ் மொழி மூலம் தேர்வு எழுதும் வசதியை தொடங்கி உள்ளோம். நுழைவுத் தேர்வை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய மதிப்பெண்கள் வேறு வேறாக உள்ளன அவர்களை ஒருங்கிணைப்படுத்துவதற்கு ஒரு நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. இந்த முறை தமிழகத்தில் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கு நிகராக தமிழக மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி கிராமங்களுக்கு சென்று போய் சேர வேண்டும். கிராமத்தில் உயர் கல்வி இல்லை என்றால் அந்த உயர் கல்வி இந்த நாட்டிற்கு தேவை இல்லை. அது தான் என்னுடைய கருத்து என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்