தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கேரளாவிற்கு எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக, கேரளாவின் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. காலை 10 மணிக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடப்பட்ட இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை பின்னர் திரும்ப பெறப்பட்டது. ஆனாலும், ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்ட கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுடன் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்தம் கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள முக்கிய அணைகளான பொன்முடி, லோயர் பெரியார், கல்லார்குட்டி, எரட்டையார் மற்றும் குண்டலா மற்றும் மூளியார் ஆகிய அணைகள் நிரம்பி வழகிறது. இடுக்கி அணை நீல நிற அளவையும், பெரிங்கல்குத்து அணை மஞ்சள் நிற அளவையும் எட்டியுள்ளது. கேரளாவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி மழை அபாயம் அதிகமுள்ள மாவட்டங்கள் முழுவதும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசும், மாநில வருவாய் அமைச்சர் ராஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கடந்த 31-ஆம் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை மட்டும் கேரளாவில் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்