முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் வள்ளியம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. 




திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடந்து காலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார்.




இதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும்,திருக்கோயிலில் இருந்து சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோயிலை சென்று அடைகிறார். அங்கு  அம்மனுக்கு காட்சியளித்த பின் சுவாமிக்கும்- அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது




பின்னர் மாலை கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்புக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தனர். இரவு 11.30க்கு கோயிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.



 


இதனையொட்டி,  திருக்கோயிலில் இரவு மூலவருக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.பங்குனி உத்திர திருவிழாவிற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் பகுதிகளில் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர.அவ்வாறு வருகை தந்துள்ள பக்தர்கள் சிறப்பு கட்டண தரிசன வரிசை முறை ரத்து செய்யப்பட்டுள்ளதை  தொடர்ந்து 100 ரூபாய் கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன் பொருட்டு  பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள பல இடங்களில் தாகம் தணிக்க குடிநீர் வசதியும் கோவில் நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.




மேலும் கடலில் புனித நீராடும்  பக்தர்கள் ஆழமான பகுதிக்குள் செல்ல முடியாத படி கடலுக்குள் குறிப்பிட்ட பகுதி தாண்டி செல்ல முடியாத படி தடுப்புகள் போட்டுள்ளன. கொரோனோ நோய் தொற்று மற்றும் கடும் ஊடங்குகள் கடை பிடிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்க பட்டதை அடுத்து அனைத்து கோயில்களிலும் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.  




தற்பொழுது தடைகள்  அறிவிக்கப்படாததால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விழாக்கள் பக்தர்கள் முன்னிலையில்  நடைபெற்று வரும் இந்த  சூழலில் கடந்த  2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா வெகு  விமரிசையாக  நடைபெற்று வருவதால் மகிழ்ச்சியில் வெளியூரில் இருந்து வரும்  பக்தர்கள் மட்டுமின்றி பாதயாத்திரையாக வரும் பக்தர்களாலும் திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் வெள்ளத்தால் விழாக்கோலம் பூண்டது.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதையாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.