தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகானவர் சரண்யா துராடி. தனது பிழையற்ற, அழகான உச்சரிப்பால் செய்தித்துறையில் காலூன்றினார். லண்டன் ஒலிம்பிக்ஸ் நேரலையில் தொகுத்து வழங்கி கவனம் ஈர்த்தார். துருதுருவென இருக்கும் சரண்யா, தன் அழகையும், திறமையையும் வீணடிக்காமல் சினிமாத் துறையிலும் தடம் பதிக்க முயற்சி செய்தார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய படங்களில் நடித்தார்.


இந்தப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய என்ட்ரியென்ற வகையில் அமையவில்லை. மீண்டும் செய்தித் தொலைக்காட்சியில் தனக்கே உரித்தான பாணியில் செய்திகள், சிறப்பு நேர்காணல்கள், அரசியல் விவாத மேடைகள் என களைகட்டியது அவருக்கு.


திடீரென செய்தி சேனல்களுக்கு டாடா சொன்ன சரண்யா துராதி, சீரியல் உலகில் கால் பதித்தார். அவருக்கு சின்னத்திரை சீரியல் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். விஜய் டிவி தான் இவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தது. நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்தார். தொடர்ந்து அவர், ரோஜா என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார்.


தொடர்ந்து, சன் டிவியில் ரன் சீரியல் மற்றும் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களில் தலைகாட்டிய சரண்யா ஒரு சில காரணங்களால் இந்த தொடர்களில் இருந்து விலகினார். 


இந்தநிலையில், திடீரென கிளம்பி வாரணாசி சென்றதாக சரண்யா தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஏன்னு தெரியலை, திடீர்னு தோணுச்சு. கிளம்பி வாரணாசி வந்துட்டேன். இந்த கங்கை நதிக்கரையில்  பார்க்கும் மனிதர்கள் நம்பிக்கைகள் விதவிதமா இருக்கு .


படித்துறையில் இறங்கி காலாற நடந்தால்.. ஒரு பக்கம் 24 மணி நேரமும் எரியுற பிணங்கள் அப்படியே திரும்புனா கலர் விளக்குகளால அலங்கரிக்கப்பட்ட படகில் உற்சாகமா ‘சிவ சம்போ’ கோஷம் போடுற  யாத்ரீகர்கள்..


சுற்றி இருக்கும் எதை பற்றியும் பிரக்ஞை இல்லாமல் கஞ்சா புகைத்து கொண்டு parallel universe ல் வாழும் தேசாந்திரிகள், அசுத்தமாக இருந்தாலும் புண்ணியம் என்று கங்கை நதியையே ப்ளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஊருக்கு பார்சல் கட்டும் குரூப் டூரிஸ்டுகள்.



நாமாக கேட்காமலேயே வாலண்டியராக ஸ்தல வரலாறு கூறி காசு கேட்கும் கதைசொல்லிகள். முதுமையின் பாரம் தாளாமல் காசியில் உயிர்பிரிய வேண்டி ஊர் உறவை விட்டு வந்து படித்துறையில் அமர்ந்து தூரத்து மணல் திட்டுகளை வெறித்தபடி நாட்களை கடத்தும் வயோதிகர்.


இன்னும் இன்னும்..


இதுக்கெல்லாம் இடையில் சாயந்திரம் கங்கையை நோக்கி ஆரத்தி நடந்த போது அங்கே படகுகளிலும் படித்துறையிலும் அமர்ந்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே குரலாக முழங்கிய போது ஒரு எனர்ஜி இருந்ததை மறுக்க முடியாது.


எதையாவது பிடித்து கொண்டு இந்த பிறவியை கடந்திட மாட்டோமா என்ற தவிப்பு தான் பக்தியாக வெளிப்படுது. எதை நம்புகிறோம் என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடுது. ஆனால் நம்பிக்கை என்னவோ ஒன்னுதான் போல இருக்கு” என்று பதிவிட்டுள்ளார். 


இதைபார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள் கண் மட்டும் அசைந்து இருந்தால் உங்கள் கால் பின்னால் நாங்களும் காலாற நடந்து இருப்போம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது, சரண்யா பதிவிட்ட அந்த பதிவை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண