மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மத்திய மண்டல காவல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செங்கமேடு கிராமத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். அதனையடுத்து சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் கொரோனா தொற்றால் தாய் மற்றும் தந்தையை இழந்து வாடும் இரண்டு குழந்தைகளை வீட்டிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறி, வீட்டிற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி, இரண்டு குழந்தைகளின் படிப்பை குறித்து விசாரித்தவர், எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் தன்னிடம் கேட்கலாம் எனவும் தெரிவித்து சென்றார்.
இதனிடையே சொத்து பிரச்னை காரணமாக கூரைவீட்டைக் கொளுத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஆய்வுக்காக வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேரடியாக புகார் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரஷியாபானு. இவரது தாயார் கடந்த 2013 ஆம் ஆண்டு அவருடை இரண்டு கூரை வீடுகள் உள்ள சொத்தினை செட்டில்மென்ட் பத்திரம் மூலம் ரஷியாபானுவுக்கு எழுதிவைத்துள்ளார். இந்த சொத்துக்கு அவரது சகோதரர் முகமதுஅலி, சகோதரி மகள் பாப்பாகனி ஆகியோரும் உரிமை கோரி வந்துள்ளனர். மேலும், அந்த நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கத்தோடு, ரஷியாபானுவின் வீட்டு குடிநீர் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சியில் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முகமதுஅலி, பாப்பாகனி ஆகியோர் தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி ரஷியாபானுவின் கூரைவீடு தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்தும் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், பெரம்பூர் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார். சொத்து பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவரிடமே நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த காவல் துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.