கருப்பு பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்த மனைவிக்கு உதவி கேட்டு கணவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 48 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில்,மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (45) சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக உள்ளார். 



கடந்த மாதம் 12-ஆம் தேதி மீனா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். குணமடைந்து வீடு திரும்பிய 6 நாள்கள் கழித்து மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 14) அவரது இடது கண் மற்றும் மேலண்ணத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



இந்த சூழலில், மயிலாடுதுறையில்  செய்தியாளர்களை சந்தித்த மீனாவின் கணவர் முத்து கண்ணீர் மல்க கூறியதாவது: கடந்த மாதம் 12-ஆம் தேதி மீனா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய் உள்ள மீனாவுக்கு ஷீராய்டு ஊசி செலுத்தப்பட்டதால் ஒவ்வாமையால் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை இல்லாமல் போனது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, மீனா கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாள்களில் கண்ணை அகற்றிவிட வேண்டும் இல்லை என்றால் உயிருக்கே பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது மீனா கண்கள் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூபாய் 9 லட்சம்  செலவாகியுள்ளது. இன்னமும் 5 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு செலவு செய்ய எங்களிடம் வசதியும் இல்லை. இதுகுறித்து, தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலருக்கு மனு அளித்துள்ளோம். எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலித்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மீனாவைக் காப்பாற்ற நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.