மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டினப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11-ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.
இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் பல்லக்குதூக்கும் (பட்டினப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டினப் பிரவேசம் நிகழ்வு நடைபெற்றது.
வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர். பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தை சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்தனர். இவ்விழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 31 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டினப்பிரவேசம் நாளை (11/06/2023) இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டனப்பிரவேசம் நடைபெற உள்ள நிலையில், பட்டின பிரவேச நிகழ்வில் மனிதனை மனிதன் சுமப்பதற்கு திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இன்று இரவு நடைபெற உள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை அப்பகுதி பொதுமக்கள் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தருமபுர ஆதீனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கூறுகையில், ”காலம் காலமாக நடந்து வரும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு சில அன்பு தோழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் தமிழ் மரபு, தமிழ் இனம், மொழி சைவத்தின் பாரம்பரிய தொன்மையான நிகழ்வு பட்டனப்பிரவேசம் நிகழ்வாகும் இந்தத் தொன்மையான நிகழ்வை நாம் போற்றினால்தான் சிறப்பாக இருக்கும். தமிழக அரசின் முழு ஒத்துழைப்போடு பட்டினப்பிரவேச திருவிழா நடைபெறுவதாக கூறினார். ஆதீன கர்த்தரை குருவாக போற்றி சீடர்கள் செய்யும் ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்யக்கூடிய நிகழ்வா பட்டினப் பிரவேச விழாவிற்கு தடை கூறுவது வேதனை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.